பாலியல் புகாரில் துணை முதல்வர் மீது நடவடிக்கை இல்லை: வேலூர் மகளிர் காவல் நிலையம் கல்லூரி மாணவர்களால் முற்றுகை!

By KU BUREAU

வேலூர்: வேலூரில் பாலியல் புகாரில் சிக்கிய கல்லூரி துணை முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வலியறுத்தி கல்லூரி மாணவர்கள் அனைத்து மகளிர் காவல் நிலையத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றமான சூழல் நிலவியது.

வேலூர் அண்ணா சாலையில் உள்ள ஊரீசு கல்லூரியின் துணை முதல்வராக இருப்பவர் அன்பழகன். இவர், கல்லூரியில் பணியாற்றி வந்த பெண் ஊழியர் ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து, அந்த பெண் அளித்த புகாரின்பேரில் வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அதேநேரம், துணை முதல்வர் அன்பழகனை காவல் துறையினர் கைது செய்யாமல் மெத்தனம் காட்டி வருவதாக புகார் எழுந்துள்ளது. அவர், தலைமறைவாக உள்ளதாக கூறி காவல் துறை தரப்பில் தட்டிக்கழிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில், கல்லூரி துணை முதல்வர் அன்பழகன் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காமல் காலம் கடத்தி வருவதாகக்கூறி மாணவர்கள் கல்லூரி வளாகத்துக்குள் நேற்று காலை ஒன்று திரண்டனர். இந்த தகவலறிந்த கல்லூரியின் 2 மெயின் கேட்டுகளையும் நிர்வாகம் பூட்டியது. இதனால், அதிருப்தியடைந்த மாணவர்கள், துணை முதல்வர் அன்பழகனை பணிநீக்கம் செய்ய வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

திடீரென பூட்டப்பட்ட கல்லூரியின் ஒரு கேட்டை மாணவர்கள் பெரிய கல்லைக்கொண்டு உடைத்தனர். பின்னர், அன்பழகனுக்கு எதிராகவும், காவல் துறையினரை கண்டித்து முழக்கமிட்டபடி அண்ணா சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஊர்வலமாக சென்று வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தை முற்றகையிட்டனர்.

இந்த தகவலறிந்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், துணை காவல் கண்காணிப்பாளர் சந்திரதாசன், காவல் ஆய்வாளர்கள் லதா, சீனிவாசன், ராஜசுலோச்சனா ஆகியோர் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

பதற்றமான சூழல்.. மேலும், அசம்பாவிதங்களை தவிர்க்க காவல் நிலையம் முன்பாக ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து, ஊரீசு கல்லூரி துணை முதல்வர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவர்கள் புகார் மனு அளித்துவிட்டு கலைந்து சென்றனர். ஊரீசு கல்லூரி மாணவர்களின் திடீர் முற்றுகை போராட்டத்தால் அனைத்து மகளிர் காவல் நிலையம் முன்பாக பதற்றமான சூழல் நிலவியது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE