ஓசூரில் ராசாயன ஊசி செலுத்தப்பட்ட 8 டன் தர்பூசணி பழங்கள் பறிமுதல்

By கி.ஜெயகாந்தன்

ஓசூர்: தேன்கனிக்கோட்டையில் ரசாயன ஊசி செலுத்தி விற்பனை செய்வதற்கு வைக்கப்பட்டிருந்த 8 டன் தர்பூசணி பழங்களை உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பறிமுதல் செய்து அழித்தனர்.

கிருஷ்ணகிரி மாட்டத்தில் கோடைக்கு முன்னரே கடும் வெயில் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் சாலையோரம் உள்ள பழக்கடைகள், குளிர்பானங்களை குடித்து வெப்பத்தை தனிக்கின்றனர். இதனை பயன்படுத்தி சிலர் குளிர்பானங்களில் கலர் பவுடர் மற்றும் தர்பூசணி பழத்தில் அதிக நிறம் சேர்க்க உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயன ஊசி செலுத்திப் பழங்களை விற்பனை செய்து வருகின்றனர். இதனை தடுக்க கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் உணவு பாதுகாப்பு துறை சார்பில் நடமாடும் உணவு பகுப்பு ஆய்வு கூடம் மூலம் ஆய்வு செய்ய ஆட்சியர் தினேஷ்குமார் உத்தரவிட்டார்.

அதன் பேரில் இன்று (மார்ச் 20) தேன்கனிக்கோட்டை பகுதியில் நடமாடும் உணவு பகுப்பு ஆய்வு வாகனங்கள் மூலம் ஓசூர் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பொதுமக்கள் முன்பு குளிர்பானம், தண்ணீர் கேன்கள் மற்றும் தர்பூசணி ஆகியவற்றை ஆய்வு செய்தனர். அப்போது 7 தர்பூசணி பழகடைகளில் ஆய்வு செய்த போது, 3 கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த தர்பூசணி பழங்களில் ரசாயன ஊசி செலுத்தி விற்பனை செய்தது தெரியவந்தது.

பின்னர் ரசாயனம் கலந்த 8 டன் தர்பூசணி பழங்களை தேன்கனிக்கோட்டை அருகே குழி தோண்டி புதைத்து அழித்தனர். மேலும் இரு வியாபாரிகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் மேலும் ஒருவருக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நோட்டீஸ் வழங்கி பழம் எங்கிருந்து வாங்கப்பட்டது என விசாரணை செய்து வருகின்றனர்.

இதுகுறித்து உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கூறும் போது,“பொதுமக்கம் மக்கள் தர்பூசணி பழங்களை நிறத்தை வைத்துதான் வாங்க ஆர்வம் காட்டுவதால், வியாபரத்துக்காக வியாபாரிகள் எரித்ரோசின் என்ற ரசாயனத்தை ஊசி மூலம் செலுத்தி விற்பனை செய்கின்றனர். இதனை சாப்பிடுவர்களுக்கு தலைவலி,காய்ச்சலை மட்டுமல்லாமல் புற்றுநோய் ஏற்ப்படும் அபாயம் உள்ளது.குறிப்பாக குழந்தைகளை அதிகம் பாதிக்கும்.

எனவே பொதுமக்கள் நிறமூட்டிய தர்பூசணிகளை சிறு துண்டுகளாக வெட்டி நீரில் மிதக்கவிடுவதால் நிறம் பிரிந்து செல்வதையும், அதேபோல் பஞ்சு, டிஸ்யூ காகிதத்தின் மூலம் தர்பூசணியை துடைத்து பார்த்தால் நிறம் ஒட்டிக்கொள்ளும் இது போன்ற சோதனைகளை செய்து பார்க்க வேண்டும். விற்பனைக்காக, தீங்கு விளைவிக்கக்கூடிய செயல்களில் ஈடுபடும் வியாபாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE