மின் இணைப்பு வழங்க ரூ.6,000 லஞ்சம்: உதவி பொறியாளர் உள்ளிட்ட மூவர் கைது @ திருவள்ளூர்

By இரா.நாகராஜன்

திருவள்ளூர்: ஆர்.கே.பேட்டை அருகே விசைத்தறி மின் இணைப்பு வழங்க ரூ.6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி பொறியாளர் உட்பட மின் வாரிய ஊழியர்கள் 3 பேரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை அருகே உள்ள வெடியங்காடு பகுதியை சேர்ந்தவர் பாபு. இவர் தனது தாய் பெயரில் வெடியங்காடு பகுதியில் விசைத்தறி கூடம் அமைப்பதற்காக விசைத்தறி மின் இணைப்பு வழங்கக்கோரி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் விண்ணப்பித்தார்.

ஆனால், விசைத்தறி மின் இணைப்பு வழங்க, வெடியங்காடு அடுத்த புதூரில் செயல்படும் மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக அலுவலக உதவி பொறியாளர் சுரேஷ்குமார், ரூ.6 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என வயர் மேன் சண்முகம் மூலம் பாபுவிடம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பாபு திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தார். அவர்களின் அறிவுரையின் பேரில், பாபு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக புதூர் அலுவலகத்துக்கு லஞ்சம் கொடுக்கச் சென்றார். அங்கு உதவி பொறியாளர் சுரேஷ்குமார் அறிவுறுத்தலின் பேரில், மற்றொரு வயர்மேன் நித்யானந்தம் பாபுவிடம் ரூ.6 ஆயிரத்தை லஞ்சமாக பெற்றார்.

அப்போது, அங்கு மறைந்திருந்த திருவள்ளூர் டிஎஸ்பி-யான ராமசந்திர மூர்த்தி தலைமையிலான, லஞ்ச ஒழிப்புத் துறையினர், உதவி பொறியாளர் சுரேஷ்குமார், வயர்மேன்கள் சண்முகம், நித்யானந்தம் ஆகிய மூவரையும் கைது செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE