திருவள்ளூர் அருகே சாலை மையத் தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதி 2 மாணவர்கள் உயிரிழப்பு

By இரா.நாகராஜன்

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே சாலை மையத் தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதி, ஐடிஐ மற்றும் பள்ளி மாணவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம், பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், வெங்கல் பகுதியை சேர்ந்தவர் சுரேந்தர் மகன் சபரிநாதன்(19). இவர், பாக்கம் அருகே கசுவா கிராமத்தில் உள்ள தனியார் அறக்கட்டளை நடத்தும் ஐடிஐ-ல் ஏசி மெக்கானிக் பாடப் பிரிவில் படித்து வந்தார். அதே தனியார் அறக்கட்டளை நடத்தும் பள்ளியில், வெங்கல் அருகே உள்ள ஆவாஜிபேட்டையை சேர்ந்த பாண்டியன் மகன் ஜெகதீஷ்(16) பிளஸ் 1 படித்து வந்தார்.

இந்நிலையில், சபரிநாதனும், ஜெகதீஷும் வழக்கம் போல் புதன்கிழமை காலை கசுவா கிராமத்தில் உள்ள ஐடிஐ மற்றும் பள்ளிக்கு சென்றனர். தொடர்ந்து, அவர்கள் மாலை வீடு திரும்பினர். அப்போது, சபரிநாதன் தன் உறவினருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளில் ஜெகதீஷுடன் வெங்கல் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது, மோட்டார் சைக்கிள், திருவள்ளூர் அருகே தாமரைப்பாக்கம் கூட்டுச் சாலை பகுதியில், பெரியபாளையம் சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக சாலை மையத் தடுப்பில் மோதியது. இதனால், மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட சபரிநாதனும், ஜெகதீஷும், வெங்கலில் இருந்து தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலை நோக்கி வந்த மினி லாரியின் சக்கரத்தில் சிக்கி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதுகுறித்து, தகவலறிந்த வெங்கல் போலீஸார் சம்பவ இடம் விரைந்து, சபரிநாதன், ஜெகதீஷ் ஆகிய இருவரின் உடல்களை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து, வழக்குப் பதிவு செய்த போலீஸார், சாலை விபத்தின் போது கவனக் குறைவாக செயல்பட்ட மினி லாரி ஓட்டுநரான ஜெயராஜை (30) கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE