கேளம்பாக்கம்: கேளம்பாக்கம் அருகே படூரில் தனியார் பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் பிரிவில் பேராசிரியராக வேலை பார்த்து வருபவர் சஞ்சீவ்ராஜ் (35). இவர் தன்னுடன் பணியாற்றும் சுமார் 27 வயது மதிக்கத்தக்க பெண் பேராசிரியரிடம் பழகி வந்துள்ளார்.
தொடக்கத்தில் நண்பரைப் போல் பழகி வந்த அவர் பின்னர் திடீரென இரட்டை அர்த்த வசனங்களுடன் பேசத் தொடங்கி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் பேராசிரியை சஞ்சீவ் ராஜ் உடன் நட்பை முறித்துக் கொண்டு திட்டி அனுப்பி உள்ளார். பின்னர் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்த சஞ்சீவ் ராஜ் சில நாட்கள் அமைதியாக இருந்து விட்டு மீண்டும் தன் வேலையை காட்டி உள்ளார். தனக்கு கல்லூரி நிர்வாகத்துடன் நெருங்கிய தொடர்பு உள்ளதாகவும், தன்னை அட்ஜஸ்ட் செய்துக் கொண்டால்தான் வேலை நிரந்தரமாகும் என்று மிரட்டி உள்ளார்.
இதனிடையே அடிக்கடி பேராசிரியர்கள் அறைக்கு செல்லும் போதும், வகுப்பறைக்கு செல்லும்போதும் சில்மிஷ வேலைகளிலும் சஞ்சீவ் ராஜ் ஈடுபட்டு உள்ளார். தொடக்கத்தில் பொறுத்துப்போன அந்த பேராசிரியை ஒரு கட்டத்தில் அந்த நபரை பற்றி தனது சக பெண் பேராசிரியைகளிடம் கூறி அழுதுள்ளார். அவரை தேற்றிய மற்ற பெண் பேராசிரியர்கள் சஞ்சீவ்ராஜை கையும் களவுமாக பிடிக்க முயற்சி செய்தனர். இதையடுத்து காலை கல்லூரிக்கு வந்ததும் சஞ்சீவ் ராஜ் தவறாக நடக்க முயன்றால் அங்கேயே கத்தி கூச்சல் போடுமாறு அந்த பெண் பேராசிரியைக்கு அறிவுறுத்தி இருந்தனர்.
அதேபோன்று இன்று காலை (மார்ச் 19) சஞ்சீவ்ராஜ் வந்து அந்த பெண் பேராசிரியையிடம் கையை தட்டி விட்டு கிண்டல் வார்த்தைகளை உதிர்த்துள்ளார். அந்த நபரின் கையை கெட்டியாக பிடித்துக் கொண்ட அந்த பெண் பேராசிரியை கத்தி கூச்சல் போட்டுள்ளார். உடனே அருகில் இருந்த சக பேராசிரியர்கள் ஓடி வந்து அந்த காமவெறி பிடித்த பேராசிரியரை அடித்து உதைத்தனர். இந்த சத்தம் கேட்ட வகுப்பறையில் இருந்து வெளியே வந்த மாணவர்களும், மாணவிகளும் தங்களது பேராசிரியைக்கு நடந்த கொடுமையைக் கேட்டு சஞ்சீவ்ராஜை பிடித்து சரமாரியாக அடித்து அவரது கைகளை பின்பக்கமாக கட்டி கேளம்பாக்கம் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
» “விஜய்யின் தவெக முதலில் தேர்தலில் நின்று டெபாசிட் வாங்கட்டும்...” - ஹெச்.ராஜா
» ஆட்டோ மீது டூவீலர் மோதி 4-ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு - உசிலம்பட்டி அருகே பரிதாபம்
கேளம்பாக்கம் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து சிறை பிடிக்கப்பட்டிருந்த பேராசிரியர் சஞ்சீவ் ராஜை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் சஞ்சீவ் ராஜ் தன்னுடன் பணியாற்றும் சக பெண் பேராசிரியையிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டது உறுதியானது. இதையடுத்து போலீஸார் சஞ்சீவ்ராஜ் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்து திருப்போரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.