மதுரை: உசிலம்பட்டி அருகே ஆட்டோ மீது டூவீலர் மோதிய விபத்தில் 4ம் வகுப்பு மாணவி உயிரிழந்தார்.
மதுரை உசிலம்பட்டி அருகே வடுகபட்டி விலக்கு பகுதியில் நான்கு பள்ளி மாணவிகளை ஏற்றிக் கொண்டு ஆட்டோ ஒன்று இன்று (மார்ச் 19) சென்றது. அந்த ஆட்டோ மதுரை - தேனி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றது. அப்போது எதிர்பாராதவிதமாக உசிலம்பட்டி- மதுரை நோக்கிச் சென்ற டூவீலர் ஆட்டோ மீது மோதியதில் ஆட்டோ கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு படிக்கும் மாணவி ரித்திகா பலத்த காயம் அடைந்தார்.
அக்கம், பக்கத்தினர் மாணவியை மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனாலும், சிகிச்சை பலனின்றி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். பிற மாணவிகள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். விபத்து குறித்து உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீஸார் விசாரித்து வருகின்றனர். 4-ம் வகுப்பு படிக்கும் மாணவி விபத்தில் உயிரிழந்த சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.