பட்டா மாற்ற ரூ.10 ஆயிரம் லஞ்சம்: குடியாத்தம் அருகே கிராம நிர்வாக அலுவலர் கைது

By KU BUREAU

வேலூர்: குடியாத்தத்தில் தான செட்டில்மென்ட் பத்திரப்பதிவுக்கு பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் கைது செய்தனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த வேப்பூர் ஆர்.எஸ் கிராமத்தைச் சேர்ந்தவர் நிஜாமுதீன் (40). ஆட்டோ ஓட்டுநர். இவரது தாயார் பரிதா பேகம். இவர்களது வீட்டுக்கு அருகே 639 சதுரடி காலிமனை உள்ளது. பரிதா பேகத்தின் பெயரில் உள்ள அந்த இடத்தை மகன் நிஜாமுதீன் பெயருக்கு கடந்தாண்டு நவம்பர் மாதம் தான செட்டில்மென்ட் எழுதி கொடுத்துள்ளார். பள்ளிகொண்டா பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவு முடிந்த நிலையில் பரிதா பேகத்தின் பெயரில் உள்ள பட்டாவை பெயர் மாற்றம் செய்யுமாறு ஆன்லைனில் பத்திரப் பதிவு அலுவலகத்தில் இருந்து வேப்பூர் ஆர்.எஸ் கிராம நிர்வாக அலுவலருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

இதற்கிடையில், பட்டா பெயர் மாற்றத்தை ஏற்காத கிராம நிர்வாக அலுவலர் கோபி (38) மீண்டும் பரிதா பேகத்தின் பெயரிலேயே பட்டாவை ஆன்லைனில் அனுப்பியுள்ளார். இதையடுத்து வீட்டுக்கு அருகில் உள்ளம் கி்ராம நிர்வாக அலுவலகத்துக்கு சென்ற நிஜாமுதீன், 'ஏன் பட்டாவில் பெயர் மாறவில்லை' என கோபியிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர், 'என்னை கேட்காமல் எப்படி நீங்கள் தான செட்டில்மென்ட் கொடுக்கலாம்' என கூறியுள்ளார். இதையடுத்து, ஆன்லைனில் பட்டா மாற்றம் கோரி 2 முறை நிஜாமுதீன் மனு செய்துள்ளார்.

அப்போதும் பரிதா பேகத்தின் பெயரிலேயே பட்டா வந்துள்ளது. வேறு வழியில்லாமல் கிராம நிர்வாக அலுவலர் கோபியிடம் சென்று நிஜாமுதீன் கேட்டபோது, ரூ.15 ஆயிரம் பணம் கொடுத்தால் பட்டா மாற்றம் செய்வதாக கூறியுள்ளார். அவ்வளவு பணம் கொடுக்க முடியாத நிலையில் இருப்பதாக நிஜாமுதீன் கூறியதால் ரூ.10 ஆயிரம் கொடுத்தால் பட்டா மாற்றம் செய்வதாக கோபி கூறியுள்ளார்.

அந்த பணத்தையும் கொடுக்க விரும்பாத நிஜாமுதீன், வேலூர் லஞ்ச ஒழிப்பு பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், அவரிடம் ரூ.10 ஆயிரம் பணத்தில் ரசாயனம் தடவி கொடுத்தனுப்பினர். அந்த பணத்தை நேற்று வேப்பூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் பெற்றுக்கொண்ட கோபியை, லஞ்ச ஒழிப்பு பிரிவு ஆய்வாளர் மைதிலி தலைமையிலான காவலர்கள் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE