எப்ஐஆர் நகலை தர லஞ்சம்: புதுச்சேரி போக்குவரத்து எஸ்ஐ பணியிடை நீக்கம்

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: விபத்தில் உயிரிழந்தவரின் சகோதரரிடம் எப்ஐஆர் நகலை தர லஞ்சம் கேட்டதாக எழுந்த புகாரையடுத்து புதுச்சேரி போக்குவரத்து எஸ்ஐ பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே உள்ள குயிலாப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சரண்ராஜ் (வயது 24). இவர் தனது நண்பர்கள் குணசேகரன் ( 24), செந்தில் (42) ஆகியோருடன் கடந்த பிப்ரவரி 12-ம் தேதி துத்திப்பட்டு அருகே பைக்கில் சென்றபோது சாலையில் நிறுத்தியிருந்த லாரி மீது மோதியது.

இச்சம்பவத்தில் 3 பேரும் காயமடைந்து உயிருக்கு போராடிய போது ஆம்புலன்ஸ் தாமதமாக வந்தது. இச்சம்பவத்தில் 3 பேரும் உயிரிழந்தனர். சாலையோரம் லாரிகள் நிறுத்தம், மின் விளக்கு இல்லாதது உள்ளிட்ட புகார்களை தெரிவித்தும் போலீஸார் நடவடிக்கை எடுக்காததும் இறப்புகளுக்கு காரணம் என மக்கள் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் இச்சம்பவத்தில் உயிரிழந்த செந்திலின் சகோதரர் முத்து முதல் தகவல் அறிக்கை நகலை (எப்ஐஆர்) வில்லியனூர் போக்குவரத்து போலீஸாரிடம் கேட்டுள்ளார். அப்போது போக்குவரத்து போலீஸ் எஸ்ஐ லஞ்சம் கோரியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பான வீடியோ ஆதாரத்துடன் முத்து, டிஜிபி அலுவலகத்தில் புகார் தந்தார்.

அதையடுத்து போலீஸார் டிஜிபி ஷாலினி சிங் விசாரணை நடத்த போலீஸ் தலைமையகத்துக்கு உத்தரவிட்டதுடன், எஸ்ஐ பாஸ்கரை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார். இந்நிலையில் விசாரணையின் அடிப்படையில் எஸ்ஐ பாஸ்கர் இன்று பணியிடை நீக்கம் செய்து ஐஜி அஜித் குமார் சிங்லா உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE