இறப்பு சான்றிதழுக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம்: விழுப்புரம் நகராட்சி அலுவலக துப்புரவு ஆய்வாளர் கைது

By KU BUREAU

விழுப்புரம்: கட்டிடத் தொழிலாளியிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நகராட்சி துப்புரவு ஆய்வாளர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம் காகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் காத்தமுத்து (58). கட்டிடத் தொழிலாளியான இவரது தந்தை அபிமன்னன் கடந்த 2016-ம் ஆண்டில் உயிரிழந்து விட்டார். இவருக்கான இறப்புச் சான்றிதழை குடும்பத்தினர் பெறத் தவறியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து தந்தையின் இறப்புச் சான்றிதழை பெற வருவாய்த்துறை அலுவலர்களை காத்தமுத்து அணுகியுள்ளார். இறப்புச் சான்றிதழ் பெற நகராட்சி அலுவலகத்தில் இருந்து சான்று பெற்று வந்து சமர்ப்பிக்க வேண்டும்; அதன் பின்னரே வருவாய்த்துறை தரப்பில் சான்று தர முடியும் என்று தெரிவித்தனர்.

அதன்படி கடந்த 11-ம் தேதி விழுப்புரம் நகராட்சி அலுவலகத்துக்குச் சென்ற காத்தமுத்து, துப்புரவு ஆய்வாளர் மதன் குமார் (41) என்பவரை அணுக, அவர், தனக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சமாக வழங்கினால், இதுவரை இறப்புச் சான்றிதழ் வழங்கப்படவில்லை என்ற சான்றிதழை வழங்குவதாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. லஞ்சம் கொடுக்க விரும்பாத காத்த முத்து, இதுபற்றி விழுப்புரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு அலுவலகத்தில் நேற்று புகார் அளித்தார்.

ஊழல் தடுப்பு அலுவலர்கள் அறிவுறுத்தலின் பேரில், தனது வீட்டுக்கு வந்து பணத்தை வாங்கிக் கொள்ளுமாறு ஆய்வாளர் மதன் குமாரை காக்க முத்து செல்பேசியில் அழைத்தார். இதையடுத்து காகுப்பத்திலுள்ள காத்த முத்துவின் வீட்டுக்குச் சென்று ரூ. 10 ஆயிரத்தை வாங்கிய போது, அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு டிஎஸ்பி. ஜி.அழகேசன் தலைமையிலான போலீஸார் துப்புரவு ஆய்வாளர் மதன் குமாரை பிடித்தனர்.

தொடர்ந்து, விழுப்புரம் நகராட்சி அலுவலகத்துக்கு மதன் குமாரை அழைத்து வந்து, அங்கு அவரிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE