முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறு: கோவை பாஜக பிரமுகர்கள் இருவர் கைது

By KU BUREAU

கோவை: சென்னையில் டாஸ்மாக் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்ற பாஜக தலைவர்கள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டதை கண்டித்து, கோவையில் பல்வேறு இடங்களில் பாஜகவினர் நேற்று முன்தினம் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செல்வபுரத்தில் பாஜகவினர் மறியலில் ஈடுபட்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். அப்போது பாஜக ஆலய ஆன்மிக மேம்பாட்டு பிரிவு மண்டல தலைவர் துரை (43), துணைத் தலைவர் மணி வண்ணன் (49) ஆகியோர் முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசிய தாக செல்வபுரம் போலீஸார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், செல்வபுரத்தில் மறியலில் ஈடுபட்ட 20-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அதேபோல, பாலக்காடு சாலை இடையர்பாளையம் பிரிவு, சுந்தராபுரம் சங்கம் வீதி, சாரதா மில் சாலை, வெள்ளலூர், துடியலூர் பேருந்து நிறுத்தம், வி.கே.கே.மேனன் சாலை, ராஜவீதி, பி.என்.புதூர் பேருந்து நிறுத்தம், காந்திபார்க் உள்ளிட்ட இடங்களில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்ட பாஜகவினரை போலீஸார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE