திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை, மகன் கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
பல்லடம் அருகேயுள்ள சேமலைக்கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த தெய்வசிகாமணி (78), மனைவி அலமாத்தாள் (75), மகன் செந்தில்குமார் (46) ஆகியோரை கடந்த நவம்பர் 28-ம் தேதி மர்ம நபர்கள் கொலை செய்து, 8 பவுன் நகையைத் திருடிச் சென்றனர். இது தொடர்பாக அவிநாசிபாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், டிசம்பர் 14-ம் தேதி சேமலைக்கவுண்டம்பாளையத்தை சேர்ந்த பால்ராஜ் என்பவர், போலீஸார் தன்னை குற்றத்தை ஒப்புக்கொள்ளும்படி அடித்து துன்புறுத்துவதாக, மாவட்ட ஆட்சியரிடம் குடும்பத்துடன் வந்து மனு அளித்தார். அதேபோல, குறவர் சமூக மக்களை போலீஸார் விசாரணை என்ற பெயரில் அடித்துத் துன்புறுத்துவதாக ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. வழக்கில் சந்தேகப்படும் நபர்களுக்கு முறையாக சம்மன் அளிக்கப்பட்டு, விசாரணை நடப்பதாகவும், எஸ்.பி. தலைமையில் 8 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளைத் தேடும் பணி நடப்பதாகவும் போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும், சம்பவம் நடந்து 110 நாட்களை எட்டிய நிலையிலும் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இதையடுத்து, இந்த வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி தமிழக டிஜிபி நேற்று உத்தரவிட்டார்.