மதுரை: அவனியாபுரம் சுற்றுச்சாலை பகுதியில் எரித்துக் கொல்லப்பட்ட இளைஞரின் உடலை கைப்பற்றிய போலீஸார், சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை அவனியாபுரம் சுற்றுச்சாலையிலுள்ள புதுக்குளம் கண்மாய் அருகே தீயில் எரிந்த நிலையில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் சடலம் ஒன்று கிடப்பதாக பெருங்குடி போலீஸாருக்கு இன்று (மார்ச் 18) காலை தகவல் கிடைத்தது. காவல் கண்காணிப்பாளர் அரவிந்த், டி.எஸ்.பி.என்சுல் நாகர், காவல் ஆய்வாளர் சரவணன் உள்ளிட்ட போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து ஆய்வு செய்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. சிறிது தூரம் ஓடிய நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த தடய அறிவியல் துறையினர் ஆய்வு செய்து சில தடயங்களை சேகரித்துச் சென்றனர். இதன்பின் கருகிய நிலையில் இருந்த இளைஞரின் உடல் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. கொலை செய்து அல்லது உயிரிருடன் தீயிட்டு எரிக்கப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
இச்சம்பவம் குறித்து அவனியாபுரம் கிராம நிர்வாக அலுவலர் சிவராமன் அளித்த புகாரின் பேரில், பெருங்குடி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். கடந்த 2 வாரத்துக்கு முன்பு இப்பகுதியில் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில், மீண்டும் ஒருவர் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
» தமிழக மீனவர்கள், படகுகளை விடுவிக்க நடவடிக்கை கோரி மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
» ராமேசுவரம் கோயிலில் மயங்கி விழுந்து வட மாநில பக்தர் உயிரிழப்பு