ரயிலில் 13 கிலோ கஞ்சா கடத்தல்: சென்னையில் மேற்கு வங்க இளைஞர் கைது 

By எம். வேல்சங்கர்

சென்னை: ரயிலில் 13.5 கிலோ கஞ்சாவை கடத்திய மேற்கு வங்கம் மாநில இளைஞரை ரயில்வே போலீஸார் கைது செய்தனர்.

சென்னை சென்ட்ரலில் இருந்து மங்களூருக்கு விரைவு ரயிலில் கஞ்சா கடத்தப்படுவதாக ரயில்வே போலீஸாருக்கு திங்கள்கிழமை மாலை ஒரு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், ரயில்வே காவல் ஆய்வாளர் கோவிந்தசாமி தலைமையிலான ரயில்வே போலீஸார் திங்கள்கிழமை மாலை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 5-வது நடைமேடையில் நின்று கொண்டிருந்த மங்களூர் மெயில் ரயிலில் பொதுப் பெட்டியில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அந்தப் பெட்டியில் இருக்கையில் அமர்ந்திருந்த ஒருவர் மீது ரயில்வே போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, அவரது பையை சோதித்தபோது, அதில் 13.5 கிலோ எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. இதன்மதிப்பு ரூ.2.70 லட்சம். இதையடுத்து, அந்த நபரை ரயில்வே காவல் நிலைத்துக்கு அழைத்து விசாரித்தனர்.

அதில் அவர், மேற்கு வங்கம் மாநிலம் பிர்போம் மாவட்டத்தைச் சேர்ந்த இஷா ஹாக் (26) என்பதும், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் கஞ்சா பொட்டலங்களை வாங்கி, ரயிலில் விஜயவாடா வந்ததும், அங்கிருந்து மற்றொரு ரயிலில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்ததும், சென்னை சென்ட்ரலில் இருந்து மங்களூர் விரைவு ரயிலில் கேரளா மாநிலம் கோழிக்கோடுக்கு கஞ்சா பொட்டலங்களை கொண்டு செல்ல திட்டமிட்டு இருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, அவரை ரயில்வே போலீஸார் கைது செய்து, கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, அவரை போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE