திருவண்ணாமலை: அரசு பேருந்துகளில் பான்மசாலா, மதுபாட்டில் மற்றும் போதைப் பொருட்கள் கடத்தப்படுவது அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் பான் மசாலா பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அண்டை மாநிலங்களிலிருந்து பான் மசாலா பொருட்களைக் கடத்தி வந்து, தமிழகத்தில் பெட்டிக்கடை முதல் பலசரக்கு கடை வரை பல இடங்களில் கூடுதல் விலைக்கு விற்பனையாகிறது. பான் மசாலா கடத்தல் மற்றும் விற்பனையில், மாபியா கும்பல் களமாடுகிறது.
இவர்களது விழுதுகளாக எண்ணற்ற நபர்கள் கைகோர்த்துக் கொண்டு. மாவட்ட அளவில், சட்ட விரோத தொழிலைத் தடையின்றி தொடர்கின்றனர். காய்கனிகளை ஏற்றி வரும் சரக்கு வாகனங்கள் மற்றும் கார்களில் பான் மசாலா பொருட்களைக் கடத்தி வரும்போது, உள்ளூர் காவல்துறையினர் நடத்தும் சோதனையில் சிக்கி கொள்ளவதால். 'கடத்தல் யுக்தியை மாபியா கும்பல் மாற்றிக் கொண்டுள்ளது. இதற்காக அவர்கள், அரசு பேருந்துகளைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவிலிருந்து தமிழகத் துக்கு பான் மசாலா பொருட்கள் அதிகளவில் கடத்தி வரப்படுகிறது . கார் மற்றும் சரக்கு வாகனங்களை, ஒவ்வொரு ஊரிலும் உள்ளூர் காவல்துறையினர் சோதனையிடுகின்றனர். இதனால், கடத்தி வரப்படும் பான்மசாலா சிக்கிக் கொள்கிறது. இதில், வெளியூர் களுக்குக் கடத்தப்படும் பான்மசாலா மட்டுமே பறிமுதலா கும். உள்ளூருக்குக் கடத்தி வரப்பட்டதாக பான்மசாலா பறிமுதல் செய்வது கிடையாது. இது, அனைத்து ஊர்களிலும், கடமை தவறாமல் பணியாற்றும் காவலர்களின் மனநிலையாகும். இதனால் பான்மசாலா கடத்தி வரும் வெளியூர் கும்பல், தங்களது செயல்திட்டத்தை மாற்றிக் கொண்டு, அரசு பேருந்துகளில் எளிதாகக் கடத்தி வந்துவிடு கின்றனர்.
» ராமநாதபுரம் மாவட்டத்தில் வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள் அனைத்தும் சேதம்!
» கிரிவலப் பாதையில் குழாய் பதிக்க அனுமதி மறுக்கும் தேவஸ்தானம் - பழநி நகராட்சி திணறல்
வாகன தணிக்கையில் ஈடுபடும் காவலர்கள், அரசு பேருந்துகளைக் கண்டு கொள்வது கிடையாது. இந்த ஒரு அலட்சியம்தான், மாபியா கும்பலுக்கு வலு சேர்த்துள்ளது. மொத்தமாகக் கடத்தாமல், ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள பான் மசாலா பொருட்களைப் பைகளில் அடைத்து, அரசு பேருந்துகளில் எளிதாகக் கடத்தி வருகின்றனர். இதற்குச் சரக்கு கட்டணத்தையும் நடத்துநருக்குச் செலுத்தி விடுகின்றனர். ஒரு சில நேரங்களில், மருந்து மற்றும் இதர பொருட்களைப் பெயரைக் குறிப்பிட்டு, அட்டைப் பெட்டிகளில் அடைத்து அரசு பேருந்துகளில் அனுப்பி விடுகின்றனர். அட்டைப் பெட்டியுடன் கடத்தல் கும்பல் வராது. நடத்துநர் கேட்கும் சரக்கான கட்டணத்தையும் விடக் கூடுதலாகக் கொடுத்துவிடுவர்.
வாகன தணிக்கையில், காவல்துறையினரின் அலட்சியத்தை வெளிச்சம்போட்டுக் காட்டியிருக்கிறது. செங்கம் நிகழ்வு. பெங்களூருவிலிருந்து திருவண்ணாமலைக்கு வந்த அரசு பேருந்தில் ரூ.19 ஆயிரம் மதிப்புள்ள பான்மசாலாவை, 4 பைகளில் நிரப்பிக் கடத்தப்பட்டுள்ளது. செங்கத்தில் டிக்கெட் பரிசோதகர்கள் சோதனையில், பான் மசாலா சிக்கியது குறிப்பிடத்தக்கது.
இது, காவல்துறையினர் பணிக்குப் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூருவிலிருந்து செங்கம் வரை சுமார் 150 கி.மீ., தொலைவுக்குப் பயணித்த அரசு பேருந்தை, வழித்தடங்களில் உள்ள காவல்துறையினர் சோதனை நடத்தி இருந்தால், பான் மசாலா பறிமுதல் செய்யப்பட்டிருக் கும் பான் மசாலாவை போன்று புதுச்சேரியிலிருந்து விழுப்புரம் மாவட்டம் வழியாகத் திருவண்ணாமலைக்கு வரும் அரசு பேருந்துகளில் மதுபான பாட்டில்கள் கடத்தப்படுகிறது.
தமிழகத்தைவிட, புதுச்சேரியில் குறைந்தவிலையில் கிடைப்பதால், அங்கிருந்து கடத்திவந்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. திருவண்ணாமலை அருகே டிக்கெட் பரிசோதகர்கள் கடந்த 5 நாட்களுக்கு முன்பு நடத்திய சோதனையில், மதுபாட்டில் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த செயலில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஈடுபட் டுள்ளனர்.
பெங்களூரு செல்லும் பேருந்துகளில் உடைமைகளுடன் எளிய பயணி ஒருவர் ஏறினால், பையில் என்ன இருக்கிறது, அரிசி இருக்கிறதா? எனக் கேள்வி எழுப்பி, அரிசி இல்லை என்பதை நடத்துநர் உறுதி செய்கிறார். ரேஷன் அரிசி கொண்டு செல்லக்கூடாது, அவ்வாறு கொண்டு செல்வது சட்டப்படி குற்றம் எனப் பயணிகளுக்கு அறிவுரை வழங்குவர். ஆனால், பெங்களூருவிலிருந்து வரும் பயணிகளின் உடைமைகள் குறித்து கேள்வி எழுப்புவது கிடையாது.
இதனால், பான் மசாலா கடத்தலும் ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்குத் தெரியாமல் நடைபெறாது என்ற கருத்தும் நிலவுகிறது. எனவே, அரசு பேருந்துகள் மீதான கண்காணிப்பை ஒவ்வொரு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும் தீவிரப் படுத்தினால், பான் மசாலா மற்றும் மதுபாட்டில் கடத்தப்படுவதைத் தடுக்கலாம் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.