கரூர்: மேலப்பாளையம் ஊராட்சி வடக்குபாளையம் அம்பாள் கார்டனைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார்(25). ஆட்டோ நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி 5 மாத கர்ப்பமாக உள்ளார்.
இந்நிலையில், சந்தோஷ் குமார் பிறந்த நாளை முன்னிட்டு, நண்பர்கள் தாந்தோணி மலையைச் சேர்ந்த சுரேஷ், நரிக்கட்டியூர் தில்லை நகரைச் சேர்ந்த பிரகாஷ் (33), மேலப்பாளையத்தைச் சேர்ந்த சந்தோஷ்(26) ஆகியோர் நேற்று முன்தினம் இரவு சந்தோஷ்குமார் வீட்டில் கொண்டாடி யுள்ளனர். தொடர்ந்து, மது அருந்தியபோது ஏற்பட்ட வாய்த் தகராறில் சந்தோஷ் குமார் பிரகாஷை தாக்கியுள்ளார். இதில், காயமடைந்த பிரகாஷை தனியார் மருத்துவமனையில் சந்தோஷ் சேர்த்து, சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
அப்போது, நரிக்கட்டியூர் தில்லை நகர் பகுதியில் சந்தோஷ்குமார் நின்றிருந்தார். அவரை கண்டு ஆத்திரமடைந்த சந்தோஷ் மீண்டும் தகராறில் ஈடுபட்டு கத்தியால் சந்தோஷ்குமாரை குத்தியுள்ளார். இதில், படுகாயமடைந்த சந்தோஷ்குமாரை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து பசுபதிபாளயம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, சந்தோஷ், பிரகாஷ் ஆகிய இருவரையும் நேற்று கைது செய்தனர்.