‘சென்னையில் 3 இடங்களில் ரயில் விபத்து நடக்கும்’ - இமெயிலில் மிரட்டல் விடுத்த ஆந்திர இளைஞர் கைது

By KU BUREAU

சென்னை: சென்னையில் 3 இடங்களில் விபத்து நடைபெறும் என தெற்கு ரயில்வே குடோன் கட்டுப்பாட்டாளர் பிரிவுக்கு மின்னஞ்சல் மூலமாக மிரட்டல் தகவல் விடுத்த ஆந்திரா இளைஞரை ரயில்வே போலீஸார் கைது செய்தனர்.

தெற்கு ரயில்வேயின் கீழ் பல்வேறு நிர்வாக பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், சென்னையில் உள்ள குடோன் கட்டுப்பாட்டாளர் பிரிவு மின்னஞ்சல் முகவரிக்கு கடந்த 14ம் தேதி ஒரு மிரட்டல் தகவல் வந்தது. அதில், 3 இடங்களில் விபத்து நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டிருந்தது.

இதையடுத்து தெற்கு ரயில்வே குடோன் கட்டுப்பாட்டாளர் சார்பில், சென்னை சென்ட்ரல் ரயில்வே போலீசில் நேற்று முன்தினம் புகார் அளிக்கப் பட்டுள்ளது. இதன்பேரில் ரயில்வே போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதற்கிடையில், மின்னஞ்சல் மூலமாக மிரட்டல் விடுத்த நபரை பிடிக்க தனிப்படை அமைத்து ரயில்வே காவல் கண்காணிப்பாளர் ஈஸ்வரன் உத்தரவிட்டார். இதையடுத்து, காவல் ஆய்வாளர் கோவிந்த ராஜ் தலைமையில் 10 பேர் கொண்ட தனிப்படை போலீஸார் விசாரணையை தொடங்கினர்.

மின்னஞ்சல் எங்கிருந்து வந்தது, யார் அனுப்பியது என்பது தொடர்பாக விவரம் பெற சிபிசிஐடி உதவி பெறப்பட்டது. அவர்கள் கூகுள் நிறுவனத்து க்கு கடிதம் அனுப்பி, தகவல் திரட்டி, ரயில்வே போலீசுக்கு கொடுத்தனர். இதையடுத்து, ரயில்வே போலீஸ் தனிப்படை, ஆந்திரா மாநிலம் கடப்பா சென்று சம்பந்தப்பட்ட நபரை பிடித்து, சென்னைக்கு அழைத்து வந்து, ரயில்வே காவல் நிலையத்தில் விசாரித்தனர். இதில் அந்த நபர், ஆந்திரா மாநிலம் கடப்பாவைச் சேர்ந்த ஜெயராமன் (32) என்பதும், மின்னஞ்சல் மூலமாக மிரட்டல் விடுத்த நபர் என்பதும் தெரியவந்தது.

இந்த நபர் குறித்து ரயில்வே போலீஸார் கூறியதாவது: ஜெயராமன், கடப்பாவில் உள்ள ஒரு வணிக மாலில் பணியாற்றி வந்தார். பல இடங்களில் கடன் பெற்று, திருப்பி செலுத்தாமல் இருந்தார். பணத்தை கொடுத்தவர்கள் திருப்பி கேட்டு நெருக்கடி கொடுத்துவந்தனர். பண பிரச்னையை சரி செய்ய, மின்னஞ்சல் மூலமாக மிரட்டல் விடுத்து, பணத்தை பறிப்பது தொடர்பாக யோசனை தோன்றியது.

இதையடுத்து, தெற்கு ரயில்வே குடோன் கட்டுப்பாட்டாளர் பிரிவுக்கு சென்னையில் 3 இடங்களில் விபத்து நடைபெறும் என்று தகவல் பதிவிட்டி ருந்தார். இவரை கைது செய்யவில்லை எனில், வேறுவிதமாக பணத்தை கொள்ளையடிக்க முயற்சித்திருப்பார். இவ்வாறு அவர்கள் கூறினர். மின்னஞ்சல் மூலமாக மிரட்டல் விடுத்து, பணம் பறிக்க முயன்ற நபரை துரிதமாக செயல்பட்டு பிடித்த தனிப்படை போலீஸாரை ரயில்வே காவல் கண்காணிப்பாளர் ஈஸ்வரன் மற்றும் உயரதிகாரிகள் பாராட்டினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE