மதுரை: அலங்காநல்லூரில் நடந்த கொலைக்கு பழிக்குப் பழியாக எதிர்தரப்பைச் சேர்ந்த ஒருவரை கொல்ல முயன்ற அவரது உறவினர்கள், ஆளை மாற்றி இசை கலைஞரை கொன்றனர். இது தொடர்பாக 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.
மதுரை மாவட்டம் சிலைமான் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி மகன் அழகர்சாமி (19). டிரம்ஸ் இசை கலைஞர். கடந்த 12ம் தேதி அதி காலையில் அழகர்சாமியை அவரது வீட்டு வாசலில் வைத்து கும்பல் ஒன்று வெட்டிக் கொன்றது. இதுகுறித்து சிலைமான் போலீஸார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்நிலையில், இக்கொலை தொடர்பாக சக்கிமங்கலம் அருண்குமார் (22), அலங்காநல்லூரர் வினோத் குமார் (26), திருப்புவனம் சூர்யா (24), விரகனூர் ராம் பிரகாஷ் பாண்டியன் (20), சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி சீனிவாசன் ( 24) ஆகிய 5 பேரை பிடித்து தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அலங்காநல்லூரில் கடந்த அக்டோபரில் சரவணன் என்பவர் கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் பழிக்குப் பழியாக மதனின் கூட்டாளியை கொல்ல முயன்றபோது, அதில் சம்பந்தமே இல்லாத அழகர்சாமியை ஆள்மாற்றி கொலை செய்தது தெரிய வந்தது.
» மின் கம்பம் மீது பைக் மோதி தீப்பிடித்ததில் ஒடிசா இளைஞர் உயிரிழப்பு: கோவை சோகம்
» கீழக்கரை ஜல்லிக்கட்டில் காளை முட்டி வீரர் உயிரிழப்பு - என்ன நடந்தது?
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், அலங்காநல்லூரில் கடந்த அக்டோபர் 20-ம் தேதி சரவணன் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது மனைவி, கள்ளக்காதலன் மதன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், மதனின் கூட்டாளி ஒருவருக்கு இக்கொலையில் தொடர்பு இருப்பதாக சரவணனின் அக்கா மகன்களுக்கு தெரிய வந்தது. அவரை பற்றி விசாரித்துள்ளனர். புளியங்குளம் பகுதியை சேர்ந்த ஒருவர் தவறுதலாக அழகர்சாமியை கைகாட்டியுள்ளார். அதை நம்பி, அழகர்சாமி தான் மதனின் கூட்டாளி என நினைத்து சரவணனின் அக்கா மகன்கள் தங்கள் நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மதனின் உண்மையான கூட்டாளி, கல்மேடு பகுதியை சேர்ந்தவர். அவரை பிடித்து விசாரித்து வருகிறோம் என்று கூறினர்.