கோவை: மின் கம்பத்தின் மீது இருசக்கர வாகனம் மோதி தீப்பிடித்ததில் இளைஞர் உயிரிழந்தார்.
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் பிகாஷ் பரிஹா (31). இவர் கோவை மாவட்டம் சூலூர் அப்பநாயக்கன்பட்டியில் உள்ள உணவு தயாரிப்பு நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர் தனது நண்பருடன் அப்பநாயக்கன்பட்டியில் இருந்து கலங்கல் சாலையில் நேற்று முன்தினம் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் இருசக்கர வாகனம் மோதியது. இதில் பெட்ரோல் டேங்க் வெடித்து தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
இருவருக்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த சூலூர் போலீஸார் மற்றும் மருத்துவ குழுவினர் படுகாயமடைந்த இருவரையும் மீட்டு உடனடியாக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் பிகாஷ் பரிஹா உயிரிழந்தார். விபத்து குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.