கீழக்கரையில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளை முட்டியதில் மாடுபிடி வீரர் ஒருவர் உயிரிழந்தார்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகேயுள்ள கீழக்கரை கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கில் நேற்று ஜல்லிக்கட்டுப் போட்டி நடந்தது. அமைச்சர் பி. மூர்த்தி போட்டியை தொடங்கிவைத்தார். வாடிவாசலில் அவிழ்க்கப்பட்ட காளைகளை மாடுபிடி வீரர்கள் பிடித்து அடக்கினர்.
மூன்றாவது சுற்றில் மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகேயுள்ள கச்சராயிருப்பைச் சேர்ந்த மகேஷ்பாண்டி(25) என்பவர், சக வீரர்களுடன் களமிறங்கினார். சிறிது நேரத்தில் வாடிவாசலில் இருந்து வெளியேறிய காளை ஒன்றை மகேஷ் பாண்டி திமிலைப் பிடித்து அடக்க முயன்றார். எதிர்பாராதவிதமாக அவரை காளை முட்டியதில் பலத்த காயமடைந்தார். முதலுதவிக்குப் பின்னர் அவர் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், வழியிலேயே அவர் உயிரிழந்ததார்.
உயிரிழந்த மகேஷ் பாண்டி பட்டப்படிப்பு முடித்துவிட்டு, 3 ஆண்டுகளாக வெளிநாட்டில் பணிபுரிந்தார். கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான் சொந்த ஊருக்குத் திரும்பினார். அவருக்குத் திருமணம் ஆகவில்லை. இது தொடர்பாக அலங்காநல்லூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்
» மதுரையில் நகை வியாபாரியிடம் இருந்து ரூ.60 லட்சம் மதிப்புள்ள ரத்தினக்கல்லை வழிபறி செய்த 7 பேர் கைது