மதுரையில் ரூ.40 லட்சம் நிலம் மோசடி - 2 பேர் கைது

By என்.சன்னாசி

மதுரை: மதுரையில் பங்குதாரராக சேர்ந்து ரூ.40 லட்சம் நிலம் மோசடி செய்து, நண்பரை ஏமாற்றிய நகை அடகுகாரர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பாலை பாமா நகர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார். 20 ஆண்டாக மதுரை மேல வெளி வீதியில் எலக்ட்ரானிக்ஸ் கடை நடத்துகிறார். ஜெய்ஹிந்தபுரம் ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துராஜா. நகை அடகுகடை நடத்தும் இவர், ரியல் எஸ்டேட் தொழிலும் புரிகிறார். இவர் முத்துகுமாரிடம் நட்பாக பழகிய நிலையில், தனது ரியல் எஸ்டேட் தொழில் மூலம் நிலத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என முத்துராஜாவிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

இதன்படி, 2008-ல் பாலமேடு பகுதியில் ரூ.30 லட்சத்திற்கு நிலம் ஒன்றை திட்டமிட்டனர். நானும் பங்குதாரராக இருந்தால் மட்டுமே என்னை நம்பி நில உரிமையாளர்கள் பேசுவர் என முத்துராஜா கூறியுள்ளார். இதை நம்பி முத்துக்குமாரும், முத்துராஜாவை இணைந்து நிலங்களை வாங்கினர். இந்நிலையில் ரூ.30 லட்சத்திற்கு வாங்கிய நிலத்தை சில நாட்களில் விற்பனை செய்த நபரே மீண்டும் வாங்கி கொண்டார். இதன்மூலம் ரூ.1 லட்சம் கூடுதலாக கிடைத்ததாக கூறி ரூ.31 லட்சத்தை முத்துகுமாரிடம் முத்துராஜாவுக்கு வழங்கி மேலும், ஆசையை தூண்டினார்.

இதன்பின், முத்துக்குமாருக்கு சொந்தமான காரைக்குடி கோட்டையூரிலுள்ள பூர்வீக நிலத்தை விற்று ரூ.2 கோடி பணத்தின் மூலம் மதுரை மாவட்டம் மாரணி, நத்தம் பரளிப்புதூர், பாசிங்காபுரம் பொதும்பு ஆகிய பகுதிகளில் நிலத்தை வாங்கி அதற்கான கிரைய பணத்தை வழங்கியதோடு முத்துராஜாவுடன் இணைந்து கிரைய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

இதற்கிடையில், மாரணியிலுள்ள நிலத்தை வாங்கியபோது, அந்த இடத்தை தனது மனைவி சரஸ்வதி பெயருக்கு எழுதிக் கொடுத்தால் பிற இடத்தில் வாங்கிய அனைத்து நில பத்திரங்களிலும் இருந்தும் வெளியேறிவிட்டு முத்துக்குமாரை மட்டுமே உரிமையாளராக்கிய விடுவதாக முத்துராஜா கூறினார். இதனை நம்பிய முத்துக்குமாரும் யெழுத்திட்டுள்ளார்.

ஆனாலும், திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பரளி புதூரிலுள்ள 1 ஏக்கர் 97 சென்ட் இடத்திற்கு அசல் ஒப்பந்தப்பத்திரம் முத்துக்குமாரிடம் இருக்கும்போது, முத்துராஜாவின் உறவினர் பழனியாண்டி என்பவருக்கு இடத்தை கிரையம் பதிவு செய்து,பிறகு முத்துராஜா மருமகள் கவிதா பெயரிலும், பின்பு மனைவி சரஸ்வதி பெயரிலும் கிரயம் பதிவு செய்தார். இது போன்று பிற இடங்களிலும் வாங்கிய நிலத்தை முத்துராஜா மோசடி செய்து இருப்பது முத்துக்குமாருக்கு தெரிந்தது.

இதைத்தொடர்ந்து ரூ.40 லட்சத்திற்கு மேல் மோசடி செய்தது மட்டுமின்றி வாங்கிய பிற சொத்துகளை ஏமாற்றி மோசடி செய்ததாகவும், தொடர்ந்து தனக்கு கொலை மிரட்டல் விடுவதாகவும் முத்துராஜா, அவரது மனைவி சரஸ்வதி, மருமகள் கவிதா, முத்துராஜா உறவினர் பூபதி, பழனியாண்டி ஆகியோர் மீது மதுரை மத்திய குற்றப்பிரிவில் முத்துக்குமார் புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்கு பதிவிட்ட காவல் துறையினர் முத்துராஜா, அவரது உறவினர் பழனியாண்டியை கைது செய்தனர். எஞ்சியவர்களை தேடுகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE