கோவை: கோவை மாவட்டம் காரமடையை சேர்ந்தவர் அனிதா (28). கருத்து வேறுபாடு காரணமாக கணவர் மற்றும் மகளை பிரிந்து தனியாக வசித்து வருகிறார்.
அப்போது அனிதாவுக்கும், பெரம்பலூரை சேர்ந்த மோகன் ராஜ் (29) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இவர்களுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தையை மோகன் ராஜ், அனிதா ஆகியோர் சேர்ந்து சேலத்தை சேர்ந்த ஒருவருக்கு ரூ.2 லட்சத்துக்கு விற்பனை செய்தனர். பின்னர் அந்த குழந்தை கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இது தொடர்பாக சைல்டு லைன் பிரிவுக்கு புகார் வந்தது. அதன் அடிப்படையில் துடியலூர் போலீஸார் விசாரித்தனர்.
விசாரணையில் குழந்தை விற்பனை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இவ்வழக்கில் தொடர்புடைய அனிதா, மோகன் ராஜ், கவுண்டம் பாளையத்தை சேர்ந்த ரஞ்சிதா, சிங்காநல்லூரை சேர்ந்த சுஜாதா, சேலம் பனமரத்துப்பட்டியை சேர்ந்த தேவி, தாசம்பட்டியை சேர்ந்த கிரீன்லில்லி, வாழப்பாடியை சேர்ந்த ஷோபா ஆகிய 7 பேரை போலீஸார் கைது செய்தனர்.