அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த அமரர் ஊர்தி ஓட்டுநர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக சிஆர்பிஎப் வீரர் கைது செய்யப்பட்டார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அமரர் ஊர்தி வாகன ஓட்டுநராகப் பணியாற்றி வந்தவர் துரைமுருகன் (40). அருப்புக்கோட்டை காமராஜர் நகர் நெசவாளர் காலனியில் உள்ள அவரது வீட்டில் கடந்த 5-ம் தேதி கழுத்தில் காயத்துடன் சந்தேகத்துக்கிடமாக இறந்து கிடந்தார். தனது தாய் வீட்டுக்குச் சென்றிருந்த அவரது மனைவி ராமலட்சுமி தகவலறிந்து, அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து, தனிப்படை போலீஸார் நடத்திய விசாரணையில் துரைமுருகனை அவரது உறவினரான விருதுநகர் அல்லம்பட்டியைச் சேர்ந்த ஜெயகணேசன் (35) கொலை செய்தது தெரியவந்தது. இவர் சத்தீஸ்கர் மாநிலத்தில் சிஆர்பிஎப் காவலராகப் பணியாற்றி வந்தது தெரியவந்தது.
மனைவியுடன் பேசி பழகி வந்ததை துரைமுருகன் கண்டித்ததால் ஏற்பட்ட முன்விரோதத்தில் கடந்த 5-ம் தேதி அதிகாலை 1.30 மணிளவில் துரைமுருகனை அவரது வீட்டில் வைத்து கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு ஜெயகணேசன் தப்பியது தெரியவந்தது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து ஜெயகணேசனை அருப்புக்கோட்டை நகர் போலீஸார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.
» புதுக்கோட்டை திமுக பொறுப்பாளருக்கு எதிராக கட்சியினர் போர்க்கொடி: தலைமையிடம் முறையிட முடிவு
» கரூரில் 2 வயது மகளுக்கு பாலியல் தொல்லை: தந்தை போக்சோவில் கைது