குளித்தலை அருகே 3 பெண்களை கடத்த முயற்சி: பெங்களூரு தம்பதி கைது

By KU BUREAU

கரூர்: கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள குப்புரெட்டிபட்டியைச் சேர்ந்தவர் ரத்தினகிரி(50)- கார்த்திகைசெல்வி(45) தம்பதியினர். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். இவர்களது மூத்த மகள் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை வன சரகத்தில் வனவராக பணியாற்றிய நிலையில், கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு வேலையை ராஜினாமா செய்துள்ளார். இவருக்கு வேலைவாய்ப்பு இணையதளம் மூலம் பெங்களூருவைச் சேர்நத கார்த்திக்(41) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கார்த்திக், அவரது மனைவி கிரிஷ்மாவுடன்(39) மார்ச் 11-ம் தேதி குப்புரெட்டிபட்டி பகுதியில் காரில் சுற்றி திரிந்துள்ளார். இதையடுத்து, கார்த்திக் நேற்று முன்தினம் ரத்தினகிரி, கார்த்திகைசெல்வியிடம், தங்களது 3 மகள்களையும் வேலைக்காக பெங்களூரு அழைத்து செல்வதாக தெரிவித்துள்ளார். இதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து, கார்த்திக் ஆபாசமாக அவர்களை திட்டியுள்ளார்.

இதுகுறித்து அறிந்த அப்பகுதி மக்கள் அங்கு திரண்டு விசாரித்தனர். அப்போது, கார்த்திக் பெங்களூருவில் ஆசிரியராக பணியாற்றுவதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து, அப்பள்ளியில் விசாரித்தபோது, கார்த்திக் அங்கு வேலை பார்க்கவில்லை என தெரியவந்தது. இதனால், சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் குளித்தலை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார் 3 பெண்கள் மற்றும் பெங்களூரு தம்பதியை காவல் நிலையம் அளித்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது, கார்த்திக் முன்னுக்குபின் முரணான தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, போலீஸார் 3 பெண்களை கடத்த முயன்றதாக வழக்குப் பதிவு செய்து, இருவரையும் கைது செய்து குளித்தலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கார்த்திக்கை திருச்சி மத்திய சிறையிலும், கிரிஷ்மாவை திருச்சி பெண்கள் கிளை சிறையிலும் நேற்று முன்தினம் அடைத்தனர். காரை பறிமுதல் செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE