அவிநாசியில் நூதன மோசடி: கலச பூஜை செய்வதாக கூறி 12 பவுன் நகை திருடியவர் கைது!

By KU BUREAU

அவிநாசி: சேவூர் அருகே வடுகபாளையத்தை சேர்ந்தவர் வள்ளியம்மாள் (70). இவரது தோட்டத்து வீட்டில் திருப்பூர் 15 வேலம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சிவசந்திரன் (34) என்பவர், கடந்த 6 மாதத்துக்கு முன் வசித்து வந்தார். அப்போது அவர், வள்ளியம்மாளிடம் கலசபூஜை செய்தால், குடும்ப நலன் கிடைக்கும் எனக் கூறியுள்ளார்.

இதை நம்பி கலச பூஜையில் கலந்து கொண்ட வள்ளிம்மாள், அவரது சகோதரி பூவாத்தாள் ஆகியோர் சிவசந்திரன் கூறியபடி, மொத்தம் 12 பவுன் தங்க நகைகளை கலசத்துக்குள் போட்டனர். பூஜை முடித்து, தங்க சங்கிலிகளை சிவசந்திரன் கொடுத்தார்.

பிறகு சிவசந்திரன் வீட்டை காலி செய்துவிட்டார். நீண்ட நாட்களுக்கு பிறகு பார்த்தபோது, சிவசந்திரன் கொடுத்தது கவரிங் சங்கிலி என தெரியவந்தது. வள்ளிம்மாள் அளித்த புகாரின் பேரில், சேவூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, சிவசந்திரனை தேடி வந்தனர். அவிநாசி- கருமாபாளையம் அருகே சேவூர் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படி அவ்வழியாக வந்த நபரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் சிவசந்திரன் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE