கடலூரில் மின்கம்பத்தில் டேங்கர் லாரி மோதி விபத்து: 3 பேர் காயம், வாகனங்கள் எரிந்து சேதம்

By ந.முருகவேல்

கடலூர்: மயிலாடுதுறையில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றிவந்த டேங்கர் லாரி கடலூர் முதுநகரில் சாலையோர மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் வாகனங்கள் எரிந்து சேதமானதோடு, 3 பேர் காயமடைந்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி பகுதியில் தனியார் நிறுவனத்தில் இருந்து சென்னைக்கு கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி புறப்பட்டது. நேற்று நள்ளிரவு கடலூர் சுத்துகுளம் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரேவந்த வாகனத்தின் மீது மோதாமல் இருக்க பக்கவாட்டில் திரும்பிய போது, சாலையோரத்தில் இருந்த மின் கம்பம், மற்றும் மீன் லாரி மீதும் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் டேங்கர் லாரி முழுவதும் தீ பற்றி மளமளவென எரியத் துவங்கியது. மேலும் அந்த தீ அருகில் இருந்த இருசக்கர வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்களுக்கும் பரவியது, அங்கு அருகில் இருந்த கடைகளிலும் தீ பரவியது. இதனால் அந்தப் பகுதி முழுவதுமே தீப்பிழம்பாக காட்சியளித்தது.

சம்பவ இடத்திற்கு கடலூர் சிப்காட், புதுச்சத்திரம், நெல்லிக்குப்பம், கடலூர் ஆகிய பகுதியிலிருந்து 6 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்தது. தீயணைப்பு துறையினர் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் டேங்கர் லாரி முழுவதும் எரிந்து சேதமடைந்தது. இந்த விபத்தில் டேங்கர் லாரி ஓட்டுநர் கங்காதரன், மற்றும் விபத்து ஏற்பட்ட பகுதியில் அருகில் உள்ள புதிய ஷோரூமில் பெயிண்ட் அடிக்கும் வேலை பார்த்துக் கொண்டிருந்த சூர்யா, காதர் மைதீன் உள்ளிட்ட 3 பேர் பலத்த தீக்காயங்களுடன் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நள்ளிரவில் கடலூர் சிதம்பரம் நெடுஞ்சாலையில் டேங்கர் லாரி தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மின்கம்பி அருந்து விழுந்ததால் முதுநகர் முழுவதும் மின்சாரம் நிறுத்தப்பட்டது மேலும் கடலூர் சிதம்பரம் சாலையில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டு வேறு பாதைக்கு மாற்றி விடப்பட்டது. காவல்துறை கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் நேரில் வந்து தீ விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டார்.

நள்ளிரவில் நடைபெற்ற இந்த விபத்தினை அடுத்து நேற்றுக் காலை டேங்கர் லாரியை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது அந்த லாரியில் எறிந்தது போக மீதம் இருந்த கச்சா எண்ணெய் மிகவும் வெப்பமாக இருந்ததால் பாதுகாப்பான முறையில் வேறு வாகனத்தில் மாற்றி அப்புறப்படுத்தினர். இதனால் இரண்டு மணி நேரம் அளவிற்கு கடலூர் சிதம்பரம் சாலையில் மீண்டும் போக்குவரத்து தடைப்பட்டது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் புதுநகர் பகுதியில் நிலவியது. இது குறித்து கடலூர் முதுநகர் போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE