திருவண்ணாமலை: ஆரணியில் முதியவரை ஏமாற்றி போலி தங்க பிஸ்கட்டை கொடுத்து 2 பவுன் தங்க மோதிரத்தை பறித்துச்சென்ற கும்பலை சொகுசு காருடன் காவல் துறையினர் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருணகிரிசத்திரம் தானிய கிடங்கு அருகே டிஎஸ்பி பாண்டீஸ்வரி தலைமையில் நகர காவல் ஆய்வாளர் விநாயகமூர்த்தி, உதவி ஆய்வாளர் சுந்தரேசன் ஆகியோர் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்துக்கிடமாக வந்த சொகுசு காரை நிறுத்தி விசாரித்தனர். காரில் இருந்த 3 பேர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து, அவர்கள் 3பேரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.
அதில், நாகப்பட்டிணம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த தென்னபுலம் பகுதியைச் சேர்ந்த சாகுல் ஹமீது (67), வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த பெரிய ஊனை கிராமத்தைச் சேர்ந்த ஜாகிர் உசேன் (50) மற்றும் அயூப்கான் (48) என தெரியவந்தது. தொடர் விசாரணையில், ஆரணி வெங்கடேஸ்வரா திரையரங்கம் அருகே கடந்த மார்ச் 7-ம் தேதி நடந்து சென்று கொண்டிருந்த திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த சென்னாந்தல் கிராமத்தைச் சேர்ந்த லோகநாதன் (63) என்பவரிடம் சாகுல் ஹமீது, ஜாகிர் உசேன், அயூப்கான் ஆகியோர் 10 கிராம் போலி தங்க பிஸ்கட்டை கொடுத்து, அவர் அணிந்திருந்த 2 பவுன் தங்க மோதிரத்தை ஏமாற்றி சென்றவர்கள் என தெரியவந்தது.
இது தொடர்பாக லோகநாதன் கொடுத்த புகாரின்பேரில் சொகுசு காருடன் சாகுல் ஹமீது உள்ளிட்ட 3 பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மேலும் சில போலி தங்க பிஸ்கட்டுகளை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட தனிப்படையினரை காவல் கண்காணிப்பளார் சுதாகர் பாராட்டினார்.
» குளங்களில் வண்டல் மண், களிமண் எடுக்க அனுமதி: தென்காசி ஆட்சியர் அறிவிப்பு
» திருச்சியில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: 16 வயது சிறுவன் கைது