பெண்ணின் மொபைலுக்கு ஆபாச விடியோ அனுப்பியவர் கைது: புதுச்சேரி போலீஸார் அதிரடி

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: பெண்ணின் மொபைலுக்கு ஆபாச வீடியோ, குறுஞ்செய்திகளை தொடர்ந்து அனுப்பியவரை சைபர்கிரைம் போலீஸார் கைது செய்தனர்.

புதுச்சேரி திருக்கனூரை பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு கடந்த சில நாட்களாக அறிமுகமில்லாத எண்ணிலிருந்து ஆபாச வீடியோ மற்றும் குறுஞ்செய்தி தொடர்ந்து வந்தது. இதையடுத்து அப்பெண் சைபர் கிரைம் போலீஸில் புகார் தந்தார். புகார் சம்பந்தமாக எஸ்எஸ்பி நாரா சைதன்யா, எஸ்பி பாஸ்கரன் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் கீர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.

அந்த பெண்ணுக்கு ஆபாசமாக வீடியோ அனுப்பிய வாட்ஸ் அப் எண்ணின் இயக்கங்களை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு அவர் எங்கே இருக்கிறார் என்பது தெரிய வந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன்,கீர்த்தி தலைமையிலான போலீஸார் அடங்கிய தனிப்படை குழு அமைத்து பல்வேறு இணையவழி யுக்திகளை கையாண்டனர். அதையடுத்து முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த வேலு என்ற இம்மானுவேல் என்ற ராஜேஷ் என தெரியவந்தது.

இவரை கைது செய்து அவரிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்து விசாரணை செய்தனர். இவர் பல பெண்களுக்கும் இதுபோன்று ஆபாச மெசேஜ்களும் வீடியோக்களும் அனுப்பியது விசாரணையில் தெரிய வந்தது. எனவே இவ்வழக்கு சம்பந்தமாக கைது செய்து புதுவை தலைமையியல் குற்ற நீதிபதி சிவகுமார் முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.

இது பற்றி சைபர் கிரைம் எஸ்எஸ்பி நாரா சைதன்யா கூறுகையில், "அறிமுகமில்லாத எண்ணிலிருந்து பெண்களுக்கு அச்சுறுத்தப்படுகின்ற மாதிரி ஏதேனும் ஆபாச புகைப்படங்கள் வந்தால் உடனடியாக 1930 எண்ணிற்கு புகார் செய்யலாம். இல்லாவிட்டால் சைபர் கிரைம் போலீஸில் புகார் தரலாம். அதையடுத்து குற்றவாளிகளை உடனடியாக கண்டறிந்து அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்த ஆண்டில் 45 புகார்கள் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் வழக்குகள் பதியப்பட்டு அனைத்து வழக்குகளும் உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இணைய வழியில் நடக்கின்ற குற்றங்களை போலீாஸார் கண்டுபிடிக்க மாட்டார்கள் என்று யாரும் எளிதில் எண்ண வேண்டாம். இதுபோன்ற தவறுகள் செய்பவர்களை இணைய வழி காவல் நிலையத்தில் அதி நவீன தொழில்நுட்பம் மூலம் மிக எளிமையாக கண்டுபிடித்து அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE