ரயிலில் 10 கிலோ கஞ்சா கடத்தல்: சென்னையில் இளைஞர் கைது

By மு.வேல்சங்கர்

சென்னை: மேற்குவங்க மாநிலம் சாலிமரில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு வந்த அதிவிரைவு ரயிலில் 10 கிலோ கஞ்சா கடத்திய இளைஞரை ரயில்வே போலீஸார் கைது செய்தனர்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே காவல் ஆய்வாளர் கோவிந்தராஜ் தலைமையிலான ரயில்வே போலீஸார் புதன்கிழமை பிற்பகலில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மேற்குவங்க மாநிலம் சாலிமரில் இருந்து புறப்பட்டு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் 1-வது நடைமேடைக்கு அதிவிரைவு ரயில் வந்தது.

அதிலிருந்து இறங்கி வந்த பயணிகளை கண்காணித்தபோது, ஒருவர் மீது ரயில்வே போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை பிடித்து, விசாரித்தபோது, முன்னுக்குபின் முரணாக பேசினார். தொடர்ந்து, அவரது பையை சோதித்தபோது, அதில் 10 கிலோ எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. இதன் மதிப்பு ரூ.2 லட்சம்.

இதையடுத்து, அவரை காவல் நிலையத்துக்கு அழைத்து விசாரித்தபோது, அந்த நபர் கோயம்புத்தூரை சேர்ந்த சுரேஷ்குமார் (26) என்பதும், ஒடிசா மாநிலம் பெர்ஹாம்பூரில் இருந்து ரயிலில் கஞ்சா பொட்டலங்களை எடுத்து வந்ததும், மதுரை கொண்டு செல்ல திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்து, 10 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE