தொழிலதிபர்களிடம் பணமோசடி: திண்டுக்கல்லில் போலி வருமான வரித்துறை அதிகாரி கைது

By ஆ.நல்லசிவன்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே சத்திரப்பட்டியில் வருமான வரித்துறை அதிகாரி எனக்கூறி பணம் பறிக்க முயன்ற 75 வயது முதியவரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்தவர் கே.சந்திரசேகரன் (75). இவர் மதுரை, திண்டுக்கல், கோவை, திருப்பூர் மாவட்டத்தில் செங்கல் சூளை நடத்தும் உரிமையாளர்கள் மற்றும் தொழிலதிபர்களிடம், தன்னை வருமான வரித்துறை அதிகாரி என்று கூறி பணமோசடியில் ஈடுபட்டுள்ளார். இவர், புதன்கிழமை (மார்ச் 12) மாலை ஒட்டன்சத்திரம் அருகே சத்திரப்பட்டிக்கு வந்தார்.

அதேபகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் செந்தில்குமாருக்கு சொந்தமான சிட் பண்ட் நிறுவனத்துக்கு சென்று, அடையாள அட்டையை காட்டி, தான் வருமான வரித்துறை அதிகாரி என்றும், இந்த நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை நடக்க இருப்பதாகவும் சந்திரசேகரன் கூறியுள்ளார். பின்னர், சோதனை நடக்காமல் இருக்க பணம் கேட்டுள்ளார். சந்தேகமடைந்த, ஊழியர்கள் உடனடியாக சத்திரப்பட்டி போலீஸாருக்கு தகவல் அளித்தனர்.

அங்குவந்த போலீஸார் சந்திசேகரன் மற்றும் அவர் வந்த காரின் ஓட்டுநரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில், பல இடங்களில் வருமான வரித்துறை அதிகாரி என்று கூறி தொழிலதிபர்களிடம் பணம் பறித்ததும், சில மாதங்களுக்கு முன் சத்திரப்பட்டியில் தொழிலதிபர் செந்தில்குமார் நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை நடந்ததை அறிந்து, மீண்டும் சோதனை நடக்க இருப்பதாக பணம் பறிக்க திட்டமிட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, சந்திரசேகரனை கைது செய்த போலீஸார் தொடர்ந்து, விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE