தஞ்சையில் 10 ஆண்டுகள் கழித்து பழிக்குப் பழியாக நடந்த சம்பவம்: பைக்கில் சென்ற ரவுடி படுகொலை

By KU BUREAU

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற ரவுடியை, சிலர் காரில் மோதி சாலையில் தள்ளி கொலை செய்தனர். தஞ்சாவூர் அருகே ஏழுப்பட்டி நடுத் தெருவைச் சேர்ந்தவர் பாலையன் மகன் குறுந்தையன்(50). இவர், அதே பகுதியில் வேறு இடத்தில் உள்ள தனது தோப்புக்கு வழக்கம்போல நேற்றும் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.

ஏழுப்பட்டி பிரதான சாலையில் சென்று கொண்டிருந்தபோது, அவரைப் பின்தொடர்ந்து சென்ற கார், திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், குறுந்தையன் சாலையில் விழுந்து, எழுந்து நிற்க முயன்றபோது, காரில் இருந்து சிலர் இறங்கிச் சென்று அரிவாளால் குறுந்தையனைக் வெட்டினர். இவரது அலறலைக் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிச் சென்று அக்கும்பலைப் பிடிக்க முயன்றனர்.

இதில், ஒருவர் சிக்கிய நிலையில் மற்றவர்கள் காரில் ஏறி தப்பிவிட்டனர். இதனிடையே, அந்த இடத்திலேயே குறுந்தையன் உயிரிழந்தார். தகவலறிந்து தமிழ்ப் பல்கலைக்கழக போலீஸார் சென்று குறுந்தையன் உடலை எடுத்து, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பொதுமக்களிடம் சிக்கியவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், அவர் புதுச்சேரி மாநிலம் ஆரோவில் பகுதியைச் சேர்ந்த வடிவேலு(38) என்பதும், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக காவல் சரகத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளி பட்டியலில் உள்ள குறுந்தையன், 2013-ல் உலகநாதன், 2014-ல் உதயா ஆகியோரை கொலை செய்தவர் என்பதும், அதற்குப் பழிதீர்க்கும் நோக்கில் குறுந்தையனை நேற்று கொலை செய்ததும் தெரியவந்தது.

மேலும், இந்தக் கொலையில் ஏழுப்பட்டியைச் சேர்ந்த ஒத்தக் கை ராஜா மற்றும் அவரது நண்பர்களுக்கு தொடர்பு உள்ளதும் தெரியவந்தது. போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE