கரூரில் கல்லூரி மாணவி கடத்தல்: ஒரு தலையாக காதலித்த இளைஞர், தாய் உட்பட 5 பேர் கைது

By KU BUREAU

கரூர்: கரூரில் கல்லூரி மாணவியை மினி வேனில் கடத்திய இளைஞர், அவரது தாய் மற்றும் நண்பர்கள் 5 பேரை போலீஸார் கைது செய்தனர். கரூர் மாவட்டம் ஈசநத்தம் அருகேயுள்ள அம்மாபட்டியைச் சேர்ந்தவர் நந்தகோபால் (25).

இவர், அதே ஊரை சேர்ந்த கல்லூரி மாணவியை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். தாந்தோணிமலை பொன்நகரில் நேற்று முன்தினம் மாணவி பேருந்தில் இருந்து இறங்கி கல்லூரிக்கு நடந்து சென்றபோது, மாணவியை நந்தகோபால், அவரது தாய் கலா, நண்பர்கள் உதவியுடன் மினி வேனில் கடத்தி சென்றுள்ளார்.

இதுகுறித்த புகாரின்பேரில், தாந்தோணிமலை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். டிஎஸ்பிக்கள் செல்வராஜ், முத்துகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, சம்பவம் நடந்த இடத்தை சுற்றியுள்ள சிசிடிவி பதிவுகள், செல்போன் எண்களை ஆய்வு செய்து, திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே கோடங்கிபட்டியில் நந்தகோபால் பாட்டி பொன்னம்மாள் வீட்டில் கடத்தப்பட்ட கல்லூரி மாணவியை நேற்று முன்தினம் இரவு போலீஸார் மீட்டனர்.

விசாரணையில், நந்தகோபால் ஓராண்டாக ஒரு தலையாக மாணவியை காதலித்து வந்ததும், மாணவி வீட்டில் பெண் கேட்டும் திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை என்பதால், மாணவியை கடத்தியதும் தெரியவந்தது.

இதையடுத்து, நந்தகோபால், அவர் தாய் கலா(45), நண்பர்கள் கருப்புசாமி(28), பழனிச்சாமி(42), சரவணன்(26) ஆகியோரை போலீஸார் கைது செய்து, கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கலாவை திருச்சி பெண்கள் தனிச் சிறையிலும், மற்ற 4 பேரும் கரூர் கிளை சிறையிலும் நேற்று அடைக்கப்பட்டனர். மீட்கப்பட்ட மாணவி அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.

VIEW COMMENTS