தூத்துக்குடி: மதுபோதையில் தகராறு செய்த கணவர் மீது ஹாலோபிளாக்ஸ் கல்லைப் போட்டு, மனைவி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்செந்தூர் அருகேயுள்ள சண்முகபுரம் காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் சேர்மத்துரை (35).
கூலித் தொழிலாளியான இவருக்கு திருமணமாகி மீனாதேவி என்ற மனைவியும், இரண்டு வயது பெண் குழந்தையும் உள்ளனர். சேர்மத்துரை குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி, மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார்.
நேற்று அவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது சேர்மத்துரை அங்கிருந்த ஹாலோபிளாக் கல்லை எடுத்து மனைவி மீனா தேவியை தாக்க முயன்றுள்ளார். அதனை தடுத்து, அதே கல்லை பிடுங்கி மீனாதேவி ஆத்திரத்தில் சேர்மத்துரை தலையில் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த சேர்மத்துரை சம்பவ இடத்திலேயே இறந்தார். திருச்செந்தூர் தாலுகா போலீஸார் வழக்கு பதிவு செய்து மீனாதேவியை கைது செய்தனர்.