விருத்தாசலம்: கடலூர் மாவட்டம், பண்ருட்டியை அடுத்த அங்குச்செட்டிப்பாளையத்தில் ஆக்கிரமிப்பு நிலத்தில் வசித்து வந்தவர்களை நீதிமன்ற உத்தரவுப்படி வருவாய்த் துறையினர் கடந்த ஜனவரி மாதம் அகற்றினர். அவ்வாறு அகற்றப்பட்டவர்களுக்கு, தகுதி அடிப்படையில் வேறு இடத்தில் மாற்று மனை வழங்கப்படும் என வருவாய்த் துறையினர் உறுதி அளித்திருந்தனர். அந்த வகையில் 60 பேருக்கு மாற்று மனைக்கான பட்டா வழங்கப்பட்டுள்ளது.
இதில், லாரி டிரைவராக இருந்து வந்த முருகன் மகன் அண்ணாமலை (55) என்பவருக்கு பட்டா வழங்கவில்லை இதனால் அவர் விரக்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் அண்ணாமலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து புதுப்பேட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக வருவாய்த் துறையினரிடம் விசாரித்தபோது, அண்ணாமலைக்கு சொந்தமாக நிலங்கள் இருந்ததாகவும், அதை அவர் தனது உறவினர் பெயருக்கு எழுதி கொடுத்துவிட்டு, தற்போது மனை கேட்டதால் அவரது மனு நிராகரிக்கப்பட்டது என்றும் தெரிவித்தனர்.
» தமிழ் மக்களை சிறுமைப்படுத்தும் தர்மேந்திர பிரதான்: தமிழகம் அமைதி கொள்ளாது என முத்தரசன் எச்சரிக்கை