திருப்புவனம் நகைக்கடையில் கவரிங்கை கொடுத்து 5 பவுன் மோசடி: 4 பேர் கைது

By KU BUREAU

சிவகங்கை: திருப்புவனம் நகைக்கடையில் கவரிங் நகையை கொடுத்து, 5 பவுன் நகைகளை மோசடி செய்த 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

மதுரை அழகர் நகரைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர், சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் நகைக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் ஜனவரி 27ம் தேதி அவரது தந்தை ஜெயராமன் இருந்துள்ளார். அப்போது கடைக்கு வந்த 2 பேர், 5 பவுன் பழைய நகைகளை கொடுத்துவிட்டு, 5 பவுன் புதுநகைகளை வாங்கியுள்ளனர். இதற்கு, செய்கூலியாக ரூ.20 ஆயிரம் கொடுத்துள்ளனர். அவர்கள் சென்ற சிறிது நேரத்தில் அந்த நகைகளை ஜெய ராமன் பரிசோதித்தபோது, அவை கவரிங் என்பது தெரியவந்தது.

இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில், திருப்புவனம் போலீஸார் வழக்குப் பதிந்தனர். மேலும், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் உத்தரவின் பேரில், மானாமதுரை டிஎஸ்பி நிரேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படையினர் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரித்ததில், நகை மோசடியில் ஈடுபட்டது ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள கரிசல் குளத்தைச் சேர்ந்த திருப்பதி என்ற பாலகிருஷ்ணன் (39), கடலாடி அருகே வெள்ளம்பலைச் சேர்ந்த முனீஸ்வரன் (33), மங்கலத்தைச் சேர்ந்த திசை வீரபாண்டியன் (42), மதுரை தென்றல் நகரைச் சேர்ந்த மாரிமுத்து (41) ஆகிய 4 பேர் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் 4 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE