சிவகங்கை: திருப்பத்தூர் அருகே மண் கடத்தலில் திமுக பிரமுகர் உட்பட 3 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து, 2 பேரை கைது செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே மாங்குடி பகுதியில் பாலாற்றையொட்டி தனியார் நிலங்களில் மண் கடத்துவதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து, டிஎஸ்பி செல்வக்குமார், கண்டவராயன்பட்டி சார்பு-ஆய்வாளர் ஸ்ரீதர் தலைமையிலான போலீஸார் அப்பகுதியில் சோதனை நடத்தினர்.
அப்போது, மண் அள்ளிக்கொண்டிருந்த காரையூரைச் சேர்ந்த ஆனந்தகண்ணன் (25), வெங்கடேசன் (19) ஆகிய இருவரை பிடித்தனர். இது தொடர்பாக கண்டவராயன்பட்டி போலீஸார், திமுக விவசாய அணியைச் சேர்ந்த முருகன் உட்பட 3 பேர் மீது வழக்குப் பதிந்து, ஆனந்தகண்ணன், வெங்கடேசன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். தலைமறைவான முருகனை தேடி வருகின்றனர். மேலும், மண் திருட்டுக்கு பயன்படுத்திய மண் அள்ளும் இயந்திரம், டிராக்டர், லாரி ஆகிய 3 வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து, இதே பகுதியில் பாலாற்றை ஒட்டி தனியார் இடத்தில் சில அடிகளுக்கு கீழே மணல் கிடைக்கிறது. பாலாற்றிலும், அதனருகேயுள்ள தனியார் இடத்திலும் சிலர் சட்டவிரோதமாக மணலை அள்ளி கடத்தி வருகின்றனர். ஏற்கெனவே கடந்த மாதம் தனியார் இடத்தில் மணல் அள்ளி கடத்தியதாக, திருப்பத்தூர் திமுக பேரூராட்சி கவுன்சிலர் பஷீர் அகமது உட்பட 5 பேர் மீது வழக்குப் பதிந்து, சிலரை கைது செய்தனர். எனினும், தொடர்ந்து மாங்குடி பகுதியில் மணல் கடத்தல் நடந்து வருவதாக, அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். எனவே, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சட்டவிரோத மணல், மண் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்தது.
» தருமபுரி அரசு மருத்துவரிடம் தகராறு: கொலை மிரட்டல் விடுத்த 2 இளைஞர்கள் கைது
» சென்னை சாலையில் நடந்துசென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞர் கைது