கரூர்: குளித்தலையைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி அருள்பாண்டியன் (35). இவர் மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்தார். இவருக்கு அதே பகுதியில் கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்த சித்ரா (27) என்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இருவரும் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே வெப்படை சந்தைப்பேட்டையில் வசித்து வந்தனர். இருவரும் அங்குள்ள நூற்பாலையில் பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் சித்ராவின் நடத்தையில் அருள்பாண்டியனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 6-ம் தேதி இரவு இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த அருள் பாண்டியன், சித்ராவை வீட்டில் இருந்த கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தலைமறைவானார்.
சம்பவம் தொடர்பாக வெப்படை போலீஸார் வழக்குப் பதிந்து அருள்பாண்டியனை தேடி வந்தனர். இந்நிலையில் குமாரபாளையம் அருகே உப்புபாளையம் என்ற இடத்தில் பதுங்கியிருந்த அருள்பாண்டியனை வெப்படை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.