ராமநாதபுரம்: பரமக்குடியில் வழக்கறிஞர் மூன்று பேர் கொண்ட கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். குற்றவாளிகளை கைது செய்யக் கோரி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா விக்கிர பாண்டியபுரம் வலசை கிராமத்தைச் சேர்ந்த இருளாண்டி மகன் உத்திரகுமார் (35). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் சென்னையில் வழக்கறிஞராக இருந்து வந்தார். பரமக்குடி பகுதியில் அரசு ஒப்பந்தப் பணிகளையும் செய்து வந்தார். இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த ஓராண்டுக்கு முன்பு ராமநாதபுரம் மாவட்டம் பகைவென்றி கிராமத்தைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட உத்திரகுமார், சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பரமக்குடி தீயணைப்பு நிலையம் அருகே உள்ள அவரது சகோதரி வீட்டுக்குச் சென்றார். அங்கு இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த 3 இளைஞர்கள் வாளால் உத்திரகுமாரை சரமாரியாக வெட்டினர். இதில் உத்திரகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். பரமக்குடி நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். குற்றவாளிகளை கைது செய்யக் கோரி பரமக்குடி அரசு மருத்துவனை முன் நேற்று காலை உத்திரகுமாரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். விரைவில் கைது செய்வதாக போலீஸார் உறுதியளித்ததை தொடர்ந்து மறியலை கைவிட்டனர். பிரேதப் பரிசோதனைக்குப் பின்பு உத்திரகுமாரின் உடலை உறவினர்கள் பெற்றுச் சென்றனர்.
» திருநங்கையாக மாற வீட்டிலேயே அறுவை சிகிச்சை செய்த இளைஞர் உயிரிழப்பு: 2 திருநங்கைகள் கைது
» கோயிலை புதுப்பிக்க ரூ.3000 லஞ்சம்: பெரம்பலூர் மதனகோபால சுவாமி கோயில் செயல் அலுவலர் கைது
இந்நிலையில் பரமக்குடி நகர் போலீஸில் உத்திரகுமாரின் சகோதரி மகன் பாலமுருகன் அளித்த புகார் மனுவில், உத்திரகுமாருக்கும், பழனிச் சாமிக்கும் இடையே ரியல் எஸ்டேட் தொழில் தொடர்பாக முன்விரோதம் இருந்தது. அதனால் பழனிச்சாமியின் குடும்பத்தினர் கூலிப்படையினரை வைத்து கொலை செய்துள்ளதாக புகார் அளித்தார். அதனடிப்படையில் போலீஸார், பகைவென்றியைச் சேர்ந்த பழனிச்சாமியின் மனைவி ராஜேஸ்வரி, மகள் லேகாஸ்ரீ, மகன் விஷ்ணு பிரதான் மற்றும் 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.