கோவை, பொள்ளாச்சி நகை கடைகளில் ரூ.6.53 கோடி ஜிஎஸ்டி ஏய்ப்பு கண்டுபிடிப்பு: ஒருவர் கைது

By KU BUREAU

கோவை: கோவை, பொள்ளாச்சி நகை கடைகளில் ஜிஎஸ்டி அதிகாரிகள் தொடர் சோதனை நடத்தினர். இதில், ரூ.6.53 கோடி ஜிஎஸ்டி ஏய்ப்பு செய்த சம்பவம் தொடர்பாக ஒருவரை அதிகாரிகள் கைது செய்தனர்.

இது குறித்து கோவையில் உள்ள ஜிஎஸ்டி முதன்மை ஆணையர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மத்திய ஜிஎஸ்டி ஆணையரகத்தின் முறைகேடு தடுப்பு பிரிவு தலைமையக அதிகாரிகள் குழுவினர் கோவை மற்றும் பொள்ளாச்சியில் செயல்படும் தங்க நகை தொழில் நிறுவனங்களில் கடந்த பிப்ரவரி 1-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை ஆய்வு மேற்கொண்டனர். இதில் பொள்ளாச்சியில் செயல்படும் பிரபல நகை விற்பனை நிறுவனத்தில் சட்ட விரோதமாகவும், ஜிஎஸ்டி வரி செலுத்தியதற்கான ரசீது வழங்காமலும் முறைகேட்டில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது.

முறைகேடு செய்வதற்கு உதவும் வகையில் வணிகத்தில் இரண்டு வகையான மென்பொருள் பயன்படுத்தியது தெரியவந்தது. இதுவரை 305 கிலோ எடையிலான ரூ.217 கோடி மதிப்புள்ள தங்க நகை வணிகத்தில் ரூ.6.53 கோடி ஜிஎஸ்டி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சம்பவத்திற்கு முக்கிய காரணமாக விளங்கிய ஒருவர் மார்ச் 5-ம் தேதி கைது செய்யப்பட்டு, நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை மார்ச் 10-ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE