எட்டயபுரம் அருகே விசாரணையின்போது தப்பிய கொலை வழக்கு கைதியை சுட்டுப்பிடித்த போலீஸார்

By KU BUREAU

எட்டயபுரம் அருகே கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞர் தப்ப முயன்றதால், போலீஸார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகேயுள்ள மேல நம்பிபுரத்தைச் சேர்ந்த சீதாலட்சுமி (75), அவரது மகள் ராமஜெயந்தி (45) ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். கடந்த 3-ம் தேதி இருவரும் வீட்டுக்குள் கொலை செய்யப்பட்டு, அவர்களது 13 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.

இது தொடர்பாக தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி, தாப்பாத்தி கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன் (18), மேல நம்பிபுரம் மகேஷ் கண்ணன் (29) ஆகியோரைக் கைது செய்தனர்.

வழக்கில் முக்கிய நபரான மேலநம்பிபுரம் முனீஸ்வரன் (25) என்பவர் காட்டுப்பகுதியில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, 20-க்கும் மேற்பட்ட கிராமங்களிலும், வைப்பாறு படுகையோர காட்டுப் பகுதியிலும் 6 ட்ரோன்களை பறக்க விட்டு, முனீஸ்வரனை போலீஸார் தேடினர். நேற்று முன்தினம் இரவு அயன் வடமலாபுரத்தில் அவரைக் கைது செய்தனர்.

விசாரணையில், எட்டயபுரம் அருகேயுள்ள காட்டுப்பகுதியில் நகைகளைப் பதுக்கி வைத்துள்ளதாக அவர் தெரிவித்தார். இதையடுத்து, நேற்று அதிகாலை முனீஸ்வரனை குளத்தூர் எஸ்.ஐ. முத்துராஜ் மற்றும் போலீஸார், காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றனர். அப்போது, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர் ஜாய்சன் நவதாஸ் ஆகியோரை தாக்கிவிட்டு, முனீஸ்வரன் தப்பியோட முயன்றார். இதையடுத்து, அவரை போலீஸார் துப்பாக்கியால் சுட்டனர். பின்னர் அவரைப் பிடித்து, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். காயமடைந்த போலீஸாரும் அங்கு அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE