விழுப்புரம்: பள்ளி மாணவியை கேலி செய்த மாணவர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே உள்ள கிராமம் ஒன்றைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவியை சித்தேரிப்பட்டு கிராமத்தை சேர்ந்த கதிர்வேல் மகன் ஆகாஷ் (19), என்பவர் ஒருதலையாக காதலித்தாக கூறப்படுகிறது. இந்நிலையில், அம்மாணவியிடம் அடிக்கடி தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும் ஆகாஷ் வலது கையில் மாணவியின் பெயரை பச்சை குத்திகொண்டு மாணவியின் வீட்டிற்கு சென்று தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனை மாணவியின் பெற்றோர்கள் கண்டித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து கடந்த ஜனவரி 23-ம் தேதி அம்மாணவி படிக்கும் பள்ளிக்கு ஆகாஷ் பைக்கில் சென்றுள்ளார். இதனை பார்த்த அம்மாணவி பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் கூறியுள்ளார். இத்தகவலை அம்மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
அங்கு சென்ற மாணவியின் உறவினர்கள் பள்ளி வளாகத்திற்கு வெளியே நின்றிருந்த ஆகாஷிடம் கேட்டபோது, பைக்கில் மறைத்து வைத்திருந்த கொடுவா கத்தியை எடுத்து மாணவியின் உறவினர்களை தகாத வார்த்தையில் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து மாணவியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் கண்டாச்சிபுரம் போலிஸார் வழக்கு பதிந்து ஆகாஷை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
» “அதிமுக வாக்கு வங்கி என்பது வங்கி டெபாசிட் வைப்பு தொகை போன்றது” - ஆர்.பி.உதயகுமார் பெருமிதம்
» பைபர் படகுகளில் கச்சத்தீவு செல்வது பாதுகாப்பாக இருக்காது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்
இந்நிலையில், விழுப்புரம் கோட்டாட்சியர் முருகேசன் வெளியிட்டுள்ள உத்தரவு: பெண்களைக் கேலி செய்தல் தடை சட்டம் 1998 கீழ் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள ஆகாஷ், பாதிப்புள்ளான மாணவியை பின் தொடருதல், சமூக வலைதளம் மூலம் தொடர்பு கொள்ளுதல், பிறரிடம் அப்பெண்ணை விமர்சிப்பது என எந்த வகையில் தொடர்பு கொண்டாலும் அவரின் ஜாமீன் ரத்து செய்யப்பட்டு கைது செய்யப்படுவார். இந்த உத்தரவு மார்ச் 5-ம் தேதியிலிருந்து 2026 மார்ச் மாதம் 5-ம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவித்துள்ளார்.