ஃபேஸ்புக்கில் பலரிடம் பழகி கோடிக்கணக்கில் பணம் பறிப்பு: திருவாரூரை சேர்ந்த மாடல் அழகி கைது! 

By இ.மணிகண்டன்

விருதுநகர்: முகநூலில் பலரிடம் பழகி கோடிக்கணக்கில் பணம் பறித்த மாடல் அழகி ஒருவரை விருதுநகர் மாவட்ட சைபர் கிரைம் போலீஸார் இன்று கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்தவர் வரதராஜபெருமாள். முகநூல் மூலம் இவரிடம் 29 வயதுடைய இளம்பெண் ஒருவர் தோழியாக பழகிவந்துள்ளார். சில மாதங்களுக்கு முன் தான் மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் உள்ளதாக இந்த இளம்பெண் பண உதவி கேட்டுள்ளார். இதை நம்பி வரதராஜபெருமாளும் ரூ.5 ஆயிரம் அனுப்பியுள்ளார். பின்னர், அடிக்கடி இவ்வாறு இளம்பெண் பணம் கேட்டுள்ளார். வரதராஜபெருமாளும் அனுப்பிவந்துள்ளார்.

இதற்கிடையே முகநூல் தகவல் மூலம் அரைகுறை ஆடையுடன் அந்த இளம்பெண் தோன்றி, வரதராஜபெருமாளையும் அவ்வாறு அரைகுறை ஆடையுடன் இருக்கச் செய்து அதை ஸ்கிரீன் ஷாட் எடுத்துவைத்துள்ளார். பின்னர், இதை அவரது மனைவிக்கு அனுப்பிவிடுவதாகக் கூறி மிரட்டி மேலும், மேலும் பல முறை வரதராஜபெருமாளிடமிருந்து அந்த இளம்பெண் பணம் மற்றும் கூரியர் மூலம் நகைகளையும் வாங்கியுள்ளார்.

பாதிக்கப்பட்ட வரதராஜபெருமாள் இதுகுறித்து கடந்த மாதம் 27ம் தேதி விருதுநகர் எஸ்.பி. கண்ணனிடம் புகார் அளித்தார். அவரது உத்தரவின்பேரில், இதுகுறித்து விருதுநகர் மாவட்ட சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், வரதராஜபெருமாளிடமிருந்து மிரட்டி பணம், நகை பறித்த இளம்பெண் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள எழுவரசநல்லூரைச் சேர்ந்தவர் என்பதும், முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராமில் நந்துமா (Nandhuma) என்ற முகநூல் கணக்கு வைத்துள்ளதும் அவர் மாடலிங் தொழில் செய்து வருவதும் தெரியவந்தது. அதையடுத்து கும்பகோணத்தில் பதுங்கியிருந்த அந்த இளம்பெண்ணை விருதுநகர் மாவட்ட சைபர் கிரைம் போலீஸார் இன்று கைதுசெய்தனர்.

போலீஸார் அவரிடம் நடத்திய விசாரணையில், வரதராஜபெருமாளை மிரட்ட பல முறை பணம் மற்றும் ரூ.80 பவுன் நகைகளை வாங்கியதும், இதுபோல் வெளிநாடுகளில் பணியாற்றும் பல நபர்களிடம் பேசி அவர்களை மிரட்டி பல்வேறு தேதிகளில், பல்வேறு தவணைகளில் வங்கிக் கணக்கில் கோடிக்கணக்கில் பணம் பெற்றதும் தெரியவந்தது. அதையடுத்து, வரதராஜபெருாமளிடமிருந்து வாங்கிய 80 பவுன் நகைகளை பறிமுதல் செய்த சைபர் கிரைம் போலீஸார், அந்த இளம்பெண் வங்கிக் கணக்கில் உள்ள ரூ.61.93 லட்சம் பணத்தை முடக்கியுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE