சேலம்: ஆசிரியை கொலை வழக்கில் ஐடி நிறுவன ஊழியரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி துறையூர் விநாயகர் தெருவைச் சேர்ந்தவர் அல்பியா (31). இவர் சேலம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்து, ஆசிரியை தேர்வு பயிற்சி மையத்தில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். கடந்த நான்கு நாட்களாக அல்பியாவை காணாததால், விடுதி நிர்வாகம் சார்பில் பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
போலீஸார் வழக்கு பதிவு செய்து, அல்பியாவின் செல்போன் நம்பரை கொ்ணடு ஆய்வு செய்ததில், ஏற்காடு மலைப்பாதையில் அவரது செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. அவருடன் கடைசியாக பேசிய நபர் குறித்து போலீஸார் விசாரணை நடத்தியதில், பெரம்பலூர், அருணச்சல கவுண்டர் நகரைச் சேர்ந்த அப்துல் ஹபீஸ் (22) என்பதும், அவர் சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது.
பள்ளப்பட்டி போலீஸார் அப்துல் ஹபீஸை கைது செய்து, விசாரணை நடத்தினர். அதில், கடந்த நான்கு ஆண்டுகளாக அப்துல் ஹபீஸ் அல்பியா வை காதலித்து வந்துள்ளார். தற்போது, சென்னையில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வரும் நிலையில், அங்கு பணியாற்றும் காவியா சுல்தானா (22) மற்றும் மோனிஷா ஆகிய இருவரையும் ஒருவருக்கு தெரியாமல் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதை அறிந்த அல்பியா, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அப்துல் ஹபீஸிடம் கேட்டு வந்துள்ளார்.
» மனைவி, இரு குழந்தைகள் மர்ம மரணம்: தேடப்பட்ட கணவர் கரூரில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை
» ஓசூர் அருகே பரிதாபம்: குட்டையில் விழுந்த மாணவர், மீட்க முயன்ற ஹெச்.எம். உயிரிழப்பு
இதனால், அவரை கொலை செய்ய திட்டம் தீட்டி, காதலிகள் காவியா சுல்தானா, மோனிஷா இருவரிடமும், அல்பியா, தனது சகோதரரை திருமணம் செய்த நிலையில், அவர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்ப தகராறில் சகோதரரை கொலை செய்து விட்டார். அதற்கு, பழி வாங்க அல்பியாவை கொலை செய்ய உதவ வேண்டும் என நாடகமாடியுள்ளார். இதனை நம்பிய காதலிகள் இருவரையும், கடந்த 1-ம் தேதி சென்னையில் இருந்து இருசக்கர வாகனத்தில் அப்துல் ஹபீஸ் சேலம் அழைத்து வந்துள்ளார். பின்னர், ஓட்டுநர் இல்லாத வாடகைக் காரை எடுத்துக் கொண்டு, அல்பியாவை விடுதியில் இருந்து ஏற்காடுக்கு அழைத்து சென்றுள்ளார்.
ஏற்காடு 60 அடி பாலம் சென்றதும், காவியா சுல்தானாவும், அப்துல் ஹபீஸ் இருவரும் அல்பியாவை பிடித்துக் கொள்ள மோனிஷா மருந்து இல்லாத ஊசியை பல முறை அவருக்கு செலுத்தியுள்ளார். இதில் அல்பியா மூர்ச்சையாகி மயங்கி விழுந்து இறந்தார். கொலை செய்யப்பட்ட அல்பியாவை 60 அடி பாலத்தில் இருந்து 20 அடி பள்ளத்தில் கீழே வீசி எறிந்து விட்டு மூவரும் தப்பி சென்றது, விசாரணையில் தெரியவந்தது.
அப்துல் ஹபீஸ், காவியா, மோனிஷா ஆகிய மூவரையும், பள்ளப்பட்டி போலீஸார் ஏற்காடுக்கு அழைத்துச் சென்று, அழுகிய நிலையில் கிடந்த அல்பியா உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து, ஆசிரியை அல்பியாவை ஊசி போட்டு கொலை செய்த வழக்கில் அப்துல் ஹபீஸ், காவியா சுல்தானா, மோனிஷா மூவரையும் பள்ளப்பட்டி போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.