ஓசூர் அருகே அரசுப் பள்ளி அருகே தண்ணீர் குட்டையில் தவறி விழுந்த மாணவரும், மீட்க முயன்ற தலைமை ஆசிரியரும் உயிரிழந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பாகலூரை அடுத்த எலுவப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி மணிகண்டன். இவரது மகன் நித்தீன் (8). இவர் அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார். இப்பள்ளியில் ஓசூரைச் சேர்ந்த கவுரிசங்கர் ராஜு (53) தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில், நித்தீன் நேற்று மதியம் உணவு இடைவேளையின்போது, பள்ளியின் அருகே உள்ள விவசாய நிலத்தில் உள்ள தண்ணீர் சேமிப்பு குட்டை அருகே சக மாணவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக நித்தீன் குட்டையில் தவறி விழுந்தார். சக மாணவர்கள் உடனடியாக தலைமை ஆசிரியர் கவுரிசங்கர் ராஜுவிடம் தெரிவித்தனர். அவர் விரைந்து வந்து நீரில் தத்தளித்த நித்தீனை மீட்க, பதற்றத்துடன் குட்டையில் குதித்தார். இதில், இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த பாகலூர் காவல் ஆய்வாளர் பிரகாஷ் தலைமையிலான போலீஸார், 2 பேரின் உடல்களை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் மாணவர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
» காங்கயம் அருகே கரூர் நகை வியாபாரியிடம் போலீஸார் எனக் கூறி ரூ.1.10 கோடி கொள்ளை
» மலைக் கிராமத்தில் குழந்தை திருமணம்; தப்பிச் சென்ற சிறுமியை தூக்கிச் சென்ற உறவினர்: வீடியோ வைரல்
ரூ.3 லட்சம் நிதியுதவி... தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தனியாருக்குச் சொந்தமான பண்ணைக் குட்டையில் மூழ்கி அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் கவுரிசங்கர், நித்தின் ஆகியோர் உயரிழந்த செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன். இருவரது குடும்பத்தினர், உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவிப்பதுடன், முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.