எட்டயபுரம் அருகே நகைகளுக்காக தாய், மகள் கொலையா? - போலீஸார் தீவிர விசாரணை

By KU BUREAU

தூத்துக்குடி: எட்டயபுரம் அருகே மேலநம்பியாபுரம் கிழக்கு தெருவைச் சேர்ந்த பூவன் மனைவி சீதா லட்சுமி (70). பூவன் கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களது மகள் ராம ஜெயந்தி (48). இவரது கணவர் விஸ்வா. இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக கணவரை பிரிந்து ராமஜெயந்தி தனது தாயுடன் மேலநம்பியாபுரத்தில் வசித்து வந்தார்.

இந்நிலையில், சீதா லட்சுமியும் அவரது மகள் ராம ஜெயந்தியும் வீட்டுக்குள் சடலமாக கிடப்பதாக அக்கம் பக்கத்தினர் நேற்று மாலை எட்டயபுரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். டிஎஸ்பி அசோகன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். சீதா லட்சுமி, அவரது மகள் ராம ஜெயந்தி ஆகியோர் அணிந்திருந்த கம்மல்கள், 13 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டிருந்தன. மோப்ப நாய் ஹரீஸ், கைரேகை பிரிவு அதிகாரிகள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் தடயங்கள், கைரேகைகளை சேகரித்தனர்.

மேல நம்பியாபுரத்தில் இருந்து கோட்டூர் செல்லும் கிராமச் சாலையில் சீதா லட்சுமியின் செல்போன் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. நகைகளை கொள்ளையடிக்க கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருநெல்வேலி சரக டிஐஜி (பொ) சந்தோஷ் ஹதி மணி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் ஆகியோரும் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE