அரியலூர்: ஜெயங்கொண்டம் அருகே தனியார் நிதி நிறுவன ஊழியர் எரிந்த நிலையில் சடலமாக கிடந்த சம்பவத்தில் தம்பதி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டார். காருக்கான தவணைத் தொகையை வசூல் செய்ய சென்றபோது ஏற்பட்ட தகராறில் அவரைக் கொன்று எரித்தது போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்த கஞ்சனூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவா (32). இவர், கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வசூலிப்பாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த பிப்.28-ம் தேதி வசூலுக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுதொடர்பாக அவரது குடும்பத்தினர் பந்தநல்லூர் காவல் நிலையத்தில் மார்ச் 1-ம் தேதி புகார் அளித்தனர்.
விசாரணையில், சிவா கடந்த பிப்.28-ம் தேதி அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த கோடாலி கிராமத்துக்கு பணம் வசூல் செய்ய சென்றதும், அங்கிருந்து வீடு திரும்பவில்லை என்பதும் தெரியவந்தது. இதனிடையே, கோடாலி கிராமத்துக்கு அருகே உள்ள ஆயுதக் களம் கிராமத்தின் செங்கால் ஓடையில் உடல் எரிந்த நிலையில் ஒரு சடலம் கிடப்பதாக தா.பழூர் போலீஸாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. எரிந்த உடலில் இருந்து எடுக்கப்பட்ட மோதிரத்தை கொண்டு எரிக்கப்பட்டு இறந்து கிடப்பது சிவா என உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து போலீஸார் தரப்பில் கூறியது: கோடாலி கிராமத்தை சேர்ந்த மகேஸ் (32) என்பவர் சிவா பணிபுரியும் நிதி நிறுவனத்தில் கார் வாங்க கடன் வாங்கியுள்ளார். அதற்கான தவணைத் தொகையை 2 மாதங்கள் மட்டுமே மகேஸ் செலுத்தியுள்ளார். அதன் பிறகு 4 மாதங்கள் நிலுவை இருந்துள்ளது. இதனால், சிவா பணம் வசூல் செய்ய மகேஸ் வீட்டுக்கு சென்றபோது, அங்கு ஏற்பட்ட தகராறில் மகேஸ் மற்றும் அவரது மனைவி விமலா(27) ஆகியோர் சிவாவை தாக்கியுள்ளனர். இதில், காயமடைந்த சிவா உயிரிழந்தார்.
» திருவள்ளூரில் பிளஸ் 2 மாணவி தீக்குளித்து தற்கொலை: போலீஸார் தீவிர விசாரணை
» திருமணம் செய்ய மறுத்ததால் ஆத்திரம்: விழுப்புரம் இளைஞருக்கு விஷம் கலந்த தேநீர் கொடுத்த இளம்பெண்!
இதையடுதது, அவரது உடலை மேலும் சிலரது உதவியுடன் அருகேயுள்ள ஓடைப்பகுதியில் கொண்டு சென்று எரித்துள்ளனர். மேலும், சிவாவின் இருசக்கர வாகனத்தை அந்த பகுதியை சேர்ந்த சுரேஷ் (35) என்பவரிடம் ரூ.15 ஆயிரத்துக்கு மகேஸ் விற்றுள்ளார். இதையடுத்து இந்த வழக்கில் மகேஸ், விமலா, சுரேஷ் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்தக் கொலைக்கு உடந்தையாக இருந்த நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என்றனர்.