சென்னை அதிர்ச்சி: பிரிந்து வாழும் மனைவியிடம் தகராறு - கணவர் கைது

By KU BUREAU

சென்னை: மதுரவாயல் பகுதியில் பிரிந்து வாழ்ந்து வரும் மனைவியிடம் தகராறு செய்து தாக்கிய கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”சென்னை, மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த 28 வயது பெண் அவரது கணவர் அப்துல் ரஹ்மான் என்பவரை பிரிந்து தனது தாய் வீட்டில் கடந்த 3 வருடங்களாக 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அப்துல் ரஹ்மான் கடந்த பிப்ரவரி 27ம் தேதி அன்று மேற்படி பெண் வீட்டிற்கு சென்று தகராறு செய்து பொது இடத்தில் அவதூறாக பேசி, கையால் தாக்கி பெண்ணின் மாண்பை பங்கப்படுத்தியுள்ளார்.

காயமடைந்த பெண் இது குறித்து மதுரவாயல் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார், பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

மதுரவாயல் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட அப்துல் ரஹ்மான்என்பவரை கைது செய்தனர். மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட அப்துல் ரஹ்மான் மீது ஏற்கனவே மனைவியிடம் தகராறு செய்த குற்றத்திற்காக கோயம்பேடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட எதிரி விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE