தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே உள்ள பெருமாள்பட்டியை சேர்ந்த சுப்பையா மனைவி சக்கம்மாள் (70). இவரது கணவர் கடந்து சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களது மகன்கள் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் பணிபுரிந்து வருகின்றனர். வயது முதிர்வு காரணமாக சக்கம்மாளுக்கு உதவியாக இருப்பதற்கு தூத்துக்குடியைச் சேர்ந்த பரணிதரன் மனைவி ஆறுமுகம் (50) என்பவர் நியமிக்கப்பட்டு, அவர் சக்கம்மாளின் வீட்டில் தங்கி பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், பெங்களூருவில் வேலை செய்துவரும் சக்கம்மாளின் மகன் தினகரன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்துள்ளார். அவர் பீரோவை திறந்து பார்த்தபோது, அதில் ரூ.5.50 லட்சம் ரொக்கத்தை காணவில்லை. பணிப் பெண் ஆறுமுகத்தின் மீது சந்தேகம் ஏற்படவே, அவரது பையை சோதனையிட்டுள்ளார். அதில் ரூ.1.20 லட்சம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தினகரன் நாலாட்டின்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் வழக்கு பதிவு செய்து, பணிப் பெண் ஆறுமுகத்தை கைது செய்தனர்.
‘சக்கம்மாளுக்கு தெரியாமல், வீட்டில் உள்ள பீரோவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக பணம் எடுத்து, அதனை ஆறுமுகம் சேர்த்து வைத்துள்ளார். அதில் ரூ.4.30 லட்சம் சேர்ந்துள்ளது. இதையடுத்து தனது கணவர் பரணிதரனை வரவழைத்து அந்த பணத்தை கொடுத்து அனுப்பியுள்ளார். மேலும், பீரோவில் இருந்து ரூ.1.20 லட்சம் பணத்தை எடுத்து தனது பையில் வைத்திருந்தபோது, பிடிபட்டுள்ளார்’ என, விசாரணையில் தெரியவந்திருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.