வீடு புகுந்து சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: புதுச்சேரி வில்லியனூர் இளைஞர் கைது

By KU BUREAU

புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி, கடந்த மாதம் 27-ம் தேதி பெற்றோருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு திடீரென அவரது வீட்டினுள் புகுந்த இளைஞர் ஒருவர், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு பெற்றோர் எழுந்து பார்த்தபோது, வீட்டிலிருந்து ஒருவர் வேகமாக வெளியே ஓடுவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து சிறுமியின் பெற்றோர், லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

போலீஸார் விரைந்து சென்று, சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக பெற்றோருடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், வில்லியனூரைச் சேர்ந்த வினோத் குமார் (22) தான் , அச்சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றது தெரியவந்தது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டின் அருகில் பெண் ஒருவர் வசித்து வருகிறார். அவருடன் இன்ஸ்டா கிராம் மூலம் பழகிய வினோத் குமார், அவரை பார்க்க சம்பவத் தன்று நள்ளிரவு சென்றுள்ளார்.

அந்தப் பெண்ணை பார்த்துவிட்டு செல்லும்போது சிறுமியின் வீட்டுக்குள் புகுந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போக்சோ பிரிவில் வினோத் குமாரை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். மேலும், இது தொடர்பாக வினோத் குமாரின் நண்பரான ஐடி ஊழியர் சந்தோஷ் என்பவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE