அரியலூர்: ஜெயங்கொண்டம் அருகே தனியார் நிதி நிறுவன ஊழியர் எரித்து கொலை செய்யப்பட்டார்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்த கஞ்சனூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவா (32). இவர், கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வசூலிப்பாளராக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில், பிப்.28-ம் தேதி வசூலுக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இது தொடர்பான அவரது குடும்பத்தினர் திருவிடைமருதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனிடையே, சிவா கடந்த பிப்.28-ம் தேதி அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த கோடாலி கிராமத்துக்கு பணம் வசூல் செய்ய சென்றதும், அங்கிருந்து வீடு திரும்பவில்லை என்பது தெரியவந்தது.
இந்நிலையில், கோடாலி கிராமத்துக்கு அருகே உள்ள ஆயுதகளம் கிராமத்தின் செங்கால் ஓடையில் உடல் பாதி எரிந்த நிலையில், ஆண் பிணம் ஒன்று கிடப்பதாக ஜெயங்கொண்டம் போலீஸாருக்கு இன்று (மார்ச் 2) தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்று போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
» இல்லாத தேதியில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பிய தட்டார்மடம் போலீஸார்!
» “உத்தரப் பிரதேச ஆசிரியர்களை தமிழகத்தில் நியமிக்க சூழ்ச்சி” - கார்த்தி சிதம்பரம் எ.பி
மேலும், எரிந்த நிலையில் இருந்த உடலிலிருந்து மோதிரத்தை கைப்பற்றிக் கொண்டு, இறந்து கிடப்பது சிவா என்பதை அவர்களின் உறவினர்கள் மூலம் போலீஸார் உறுதிப்படுத்தினர்.
மேலும், கடைசியாக பணம் வசூல் செய்ய கோடாலி கிராமத்துக்கு வந்த சிவாவை யார் ஓடை பகுதிக்கு அழைத்துச் சென்று கொலை செய்தது என்ற கோணத்தில் போலீஸார் சிலரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் ஜெயங்கொண்டம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.