சாத்தான்குளம் அருகே நிலப்பிரச்சினையில் சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் பிப்.29-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு தட்டார்மடம் போலீஸார் சம்மன் அனுப்பியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருநெல்வேலி மேலப்பாளையம் நேதாஜி தெருவை சேர்ந்த லிங்கத்துரை மகன் வசந்த். இவர்களது பூர்வீக வீடு தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தை அடுத்த தட்டார்மடம் அருகே உள்ள சாலைப்புதூர் கிராமத்தில் உள்ளது. இந்த பூர்வீக வீடு மற்றும் நிலம் தொடர்பாக லிங்கத்துரைக்கும் அவரது சகோதரர் செல்வராஜ் குடும்பத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து லிங்கத்துரை குடும்பத்தினர் தாக்கியதாக அவரது சகோதரர் செல்வராஜ் என்பவர் தட்டார்மடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தாமலேயே லிங்கத்துரை குடும்பத்தினர் மீது வழக்குப் பதிவு செய்ததாக ஆட்சியர் மற்றும் காவல் துறை அதிகாரிகளிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. மனுவில் நிலம் யாருக்கு சொந்தமானது என விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் தட்டார்மடம் போலீஸார் லிங்கத்துரை குடும்பத்தினருக்கு சம்மன் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
அதில் பிப்.29-ம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என தெரிவித்துள்ளனர். பிப்ரவரி மாதம் 28-ம் தேதியுடன் முடிந்த நிலையில் 29-ம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என போலீஸார் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.